பேரினவாதத்துக்கு வலுச்சேர்த்து இயங்கும் ஜனநாயகவாதிகளை நிராகரிக்கவேண்டும்! நஸீர் வலியுறுத்து

Report Print Rakesh in அறிக்கை

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் ஜனநாயகத்தை நேசிக்கும் அரசியல் கட்சிகள் செயற்பட்டுவருகின்றன.

இந்நிலையில் ஜனநாயக அரசியலில் உள்ள சிலர் பேரினவாதிகளின் கருத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்து, இன ஐக்கியத்துக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் தற்போது செயற்பட்டு வருவது இந்த நாட்டுக்கு உகந்ததல்ல கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்ட சம்பவங்கள் இன்று முஸ்லிம் சமூகத்தைப் பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு இனவாத சக்திகள் தமது துவேஷ செயற்பாடுகளை அரங்கேற்றி வருகின்றன.

இந்த இனவாதக் கருத்துக்கள் நாட்டுக்குப் பெரும் தீங்கை ஏற்படுத்தும் நிலையைத் தோற்றிவித்துள்ளன. உண்மைகளுக்குப் புறம்பாக தத்தமது எண்ணங்களில் ஏற்படும் நெறிகெட்ட சிந்தனைகளுக்கு ஏற்ப இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் இனங்களுக்குகிடையில் விரோதங்கள் தோன்றவே வழிவகுக்கின்றன.

இவர்களது இத்தகைய கருத்துக்களுக்கு சார்பாக ஜனநாயகத்தை நேசிக்கின்றோம் எனக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளும் மற்றும் சிலரும் மடித்துக் கட்டிக்கொண்டு தமது கருத்துக்களால் அவர்களது கூற்றுக்களுக்கு வலுச்சேர்த்து வருவது ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சமாகத் தெரியவில்லை.

சமூக நலன் கருதி எமது அரசியல் தலைமைகள் தமது அமைச்சுப் பதவிகளை ஒன்றாகத் துறந்தமை குறித்தும் இவர்கள் தமது இனவாதக் கருத்துக்களைத்தான் முன்வைத்து வருகின்றனர்.

பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த ஒத்திவைப்பு விவாதத்தில் கருத்துரைத்தபோது,

"வெளிநாட்டு அழுத்தங்களால் முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இதனைப் புலனாய்வுத்துறை தேடிப் பார்க்க வேண்டும் என்கிறார். அத்துடன், முஸ்லிம்களில் எவர் ஒருவர் பாரிய தவறிழைத்தாலும், அவருக்கு எதிராக கைவைக்க முடியாது, அவரை நாம் பாதுகாப்போம் என்பதற்காகவே அவர்கள் ஒட்டுமொத்தமாக தமது பதவிகளை இராஜிநாமா செய்து சொல்லும் செய்தியாகும் எனவும் அவர் கூறுகின்றார்.

எமது தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த இராஜிநாமா குறித்து விளக்கியுள்ளபோதும் உதய கம்மன்பில முழுங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போட்டுள்ளதையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.

ஜனநாயகவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் இத்தகையோர் ஏதோ ஒரு வகையில் தமது இனவாதக் கருத்துக்களை விதைத்து வருகின்றமையை நாம் சமகாலத்தில் பார்க்க - கேட்க முடிகின்றது.

இந்தநிலை தொடர்வதற்கு நாம் தொடாந்து அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுக்க வேண்டியதும் அவசியமானது என்றுள்ளது.