தொண்டர் ஆசிரியர் நியமனத்துக்காக மேன்முறையீடு செய்து, மீண்டும் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த விடயம் பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனம் கிடைக்காத 24 பேரின் ஒப்பங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மகஜரில்,
கிழக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்கள் கடந்த வாரம் நிரந்தர ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளளப்பட்டனர்.
ஆனால் இந்த நியமனத்துக்கு எங்களுக்கு தகுதியிருந்தும் நியமனம் கிடைக்காது பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
2018 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொண்டர் ஆசிரியர்களுக்தான் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியிருந்தோம். ஆனால் இதில் நாங்கள் தெரிவு செய்யப்படாததை ஆட்சேபித்து அதற்கு எதிராக மேன்முறையீடு செய்தோம்.
எங்களது இந்த மேன் முறையீட்டை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கிழக்கு மாகாண பேரவைச் செயலகம் 2019 மே 30ஆம் திகதியும் ஜுன் 7ஆம் திகதியும் மீண்டும் எங்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்திருந்தது.
இதன்போது சுமார் 400 பேரின் முறைப்பாடுகள் மீள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 24 தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்துக்கு தகுதியானவர்கள் என சிபாரிசு செய்யப்பட்டு, கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு அப்போது தெரிவிக்கப்பட்டது.
எனவே, தகுதியிருந்தும் நியமனம் கிடைக்காமல் போன 24 பேரினுடைய நியமனத்தை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.