பலாலி விமான நிலையம் ஐயமற்ற வரமாக அமையட்டும்

Report Print S.P. Thas S.P. Thas in அறிக்கை

பலாலி விமான நிலையத்தைப் புதுப்பொலிவுபடுத்தி இந்தியாவுக்கும் இதர பிராந்திய நாடுகளுக்குமிடையிலான விமான சேவையை நடத்துவதற்கான வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய மத்திய அரசின் நிதிப்பங்களிப்புடன் நடைபெறுகின்ற பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள், நிறைவு பெற்றதும் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தி யாவுக்கும் இந்தியாவில் இருந்து பலாலிக்கும் விமானப் பயணத்தை மேற்கொள்வது நேரவிரயத்தையும் பயணக்களைப்பையும் வலு வாகக் குறைக்கும்.

தவிர, தமிழகத்துச் சகோதரர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து போகவும் வடபுலத்துத் தமிழ் மக்கள் தமிழகத்துக்குச் சென்று வருவதற்குமான சந்தர்ப்பங்கள் நிறையவே ஏற்படும்.

இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விடயம். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா செல்வதென்றாலும் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதாக இருந்தாலும் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கே செல்ல வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அங்கு செல்வதாக இருந்தால் அல்லது அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதாக இருந்தால், சுமார் பத்து மணித்தியாலங்களை வாகனப் போக்கு வரத்தில் செலவிட வேண்டியுள்ளது.

கொழும்பில் இருந்து இந்தியாவுக்குச் செல்வதற்கான விமானப் பயண நேரம் வெறும் 60 நிமிடங்களாக இருக்க, கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைய பத்து மணித்தியாலங்கள் ஆகின்றது என்றால் பயணக் கஷ்ரம் எத்துணை என்பதைப் புரிய முடியும்.

எனவே இந்த இட்டல் இடைஞ்சல்கள் எதுவுமின்றி மிகக் குறைந்த நேரத்துக்குள் பலாலி விமான நிலையத்தைச் சென்றடையலாம் என்பது நல்ல கிடைப்பனவாகும்.

எனவே புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும்போது பலாலி விமான நிலையம் வடபகுதி மக்களுக்கான வரமாகும்.

எனினும் பலாலி விமானத்தளம் விஸ்தரிக்கப்படலாம். பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படலாமென்ற ஐயம் இன்னமும் நீடிக்கிறது.

இந்த ஐயத்தை பலாலி விமான நிலையத்துக்கெனப் புதிதாக அமைக்கப்படும் நுழை வாயில் வலுப்படுத்தியுள்ளது.

அதாவது, இதுகாறும் பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் கிழக்குப் பக்க மாகவே இருந்தது.

இவ்வாறு கிழக்குப் பக்கத்தில் நுழை வாயில் தொடர்ந்தும் இருக்குமாயின் அதற்கு முன்பாகவுள்ள ஏகப்பட்ட நிலப்பரப்புக் காணிகள், அவற்றின் உரிமையாளர்களுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.

ஆனால் புதிய நுழைவாயில் மேற்குப் பக்கமாக அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இஃது கிழக்குப் பகுதியிலுள்ள காணிகள் சுவீகரிக்கப்படப் போகிறதோ என்ற ஐயத்தைத் தந்துள்ளது.

எனவே இது தொடர்பில் தெளிவான விளக்கத்தை வழங்குவது சம்பந்தப்பட்டவர்களின் தலையாய கடமையாகும்.

- Valampuri

Latest Offers