இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் உருவாகுமானால் கூடவே தமிழ் இராச்சியமொன்றும் உருவாகும்

Report Print Sumi in அறிக்கை
840Shares

இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் ஒன்று உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த - சிங்கள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

இலங்கையில் மீண்டும் சிங்கள இராச்சியத்தை நிறுவவேண்டுமென கண்டியில் பெரும் எடுப்பில் மாநாடு கூட்டி பொதுபலசேனா அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் ஒன்று உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த - சிங்கள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லிவைக்க விரும்புகிறோம்.

இஸ்லாமிய அடிப்படைவாத சவால்களுக்கு எதிரான இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் சாட்டில் கலப்படமற்ற சிங்கள - பௌத்த பேரினவாதம் விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கின்றது.

1956இல் முன்வைக்கப்பட்ட சிங்கள இராச்சிய வெறிக்கூச்சல் தான், 30 வருட கால உள்நாட்டு யுத்தத்திற்கு இறுதியில் அடிகோலியது என்பதனை மறந்து மீண்டும் பேரினவாதம் அரசியல் அரங்கை ஆக்கிரமிக்க துடித்து நிற்கின்றது.

இலங்கைத் தீவில் இன - மத சமத்துவத்திற்கு இடமில்லை என்பதை இந்தப் பேரினவாத ஆதிக்க சக்திகள் பிரகடனப்படுத்தியுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினையில் பௌத்த - சிங்கள மதவெறி சக்திகளின் தலையீட்டை இருகரம் நீட்டி வரவேற்ற சில தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு சில சமூக அமைப்புக்களும் இப்பொழுது என்ன செய்யப்போகின்றார்கள்? என வினவப்பட்டுள்ளது.