வில்பத்து பாதை வழக்கு! மீண்டும் விவாதத்திற்கு எடுத்து கொள்ள முடிவு

Report Print Sujitha Sri in அறிக்கை

வில்பத்து சரணாலயத்திற்கு அண்மித்ததாக செல்லும் B37 இலவன் குளம் - மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்தது.

இருந்த போதும் மனுதாரர்களான சூழலியல் இயக்கங்கள், தீர்வு யோசனைக்கு சம்மதம் தெரிவிக்க மீண்டும் மறுத்த காரணத்தினால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்த வழக்கை மீண்டும் விவாதத்திற்கு எடுத்து கொள்வதென நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த வழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நான்காவது பிரதிவாதியாக இருக்கின்றார்.

சூழலியல் சார்ந்த இயக்கங்களாகான Environmental foundation (guarantee) limited, Wildlife and nature protection society srilanka ஆகியோர் மனுதாரர்களாக இருக்கும் இந்த வில்பத்து பாதை வழக்கில், இடையீட்டு மனுதாரகளாக சட்டத்தரணி பீர் முஹம்மட் முஹம்மட் அஸ்லம் உட்பட அந்த பிரதேச பொதுமக்கள் சிலர் இருக்கின்றனர்.

நான்காவது பிரதிவாதியான ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.யூ.அலி சப்ரி இந்த வழக்கில் தொடர்ந்தும் ஆஜராகி வருகிறார். இடையீட்டு மனுதார்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வெலியமுன ஆஜராகி வருகிறார்.

ஏற்கனவே கடந்த வருடம் ஜனவரி 25ஆம் திகதி, இணக்கம் காணப்பட்டவாறு பொதுமக்கள் குறிப்பிட்ட பாதையை பயன்படுத்தக்கூடிய வகையிலும், வனஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதமாகவும் ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி இந்த பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இந்த வருடம் மார்ச் 25 திகதி குறிக்கப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நிறைவு செய்து முடிவுக்கு கொண்டுவருவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் மனுதாரர்கள் அடுத்தடுத்து இடம்பெற்ற வழக்குகளில் இணக்கம் வெளியிட மறுப்பு வெளியிட்ட காரணத்தினால், குறிப்பாக இந்த பாதையில் பொதுமக்கள் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்வாகனம் ஆகியவற்றில் கூட போக்குவரத்து செய்வதற்கு மறுப்பை வெளியிட்டதனாலும் உச்ச நீதிமன்றத்தில் இணக்கம் காணப்படவில்லை.

அதுமாத்திரமின்றி வனஜீவராசிகள் திணைக்களமும் இந்த பாதையை திறப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையிலையே, இம்மாதம் ஜூலை முதலாம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விவாதத்திற்கான திகதி தொடர்பில் இன்று முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டு நேற்று வழக்கு விசாரணைக்கான திகதியும் அறிவிக்கப்பட்டது.

நான்காவது பிரதிவாதியான ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நேற்றைய தினமும் உச்சமன்றத்தில் ஆஜராகி இருந்தார். வில்பத்து பாதையை மீள திறக்க வேண்டும் என்பதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பல்வேறு நடவடிக்கைகளையும், அர்ப்பணிப்பான முயற்சிகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே வனஜீவராசிகளுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் காமினி ஜெயவிகர பெரராவை ரிஷாத் பதியுதீன் பல தடவை கொழும்பில் சந்தித்து இந்த பாதை மூடப்பட்டிருப்பதால் அந்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து எடுத்துரைத்திருந்தமையையும், நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இந்த பாதையின் முக்கியத்துவம் தொடர்பில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers