இந்து ஆலயங்களில் மிருகபலி வேள்வித்தடையை நீக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்

Report Print Sujitha Sri in அறிக்கை

இந்து ஆலயங்களில் மிருகபலி வேள்வி நடத்த தடை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டு எல்லைக்கு உட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்களை பலியிடுவதற்கு யாழ். மேல் நீதிமன்றத்தால் முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

அகில இலங்கை சைவ மகா சபையினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போதே நீதிபதி மா.இளஞ்செழியன் மேற்படி உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், வேள்வியின் பண்பாட்டு தேவையை வலியுறுத்தியும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேன்முறையீட்டு மனு யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜாவால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் எதிர் மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே யாழ். மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மேன்முறையீட்டாளரான யாழ்ப்பாணம் கவுணவத்தை நரசிம்ம வைரவர் ஆலய நிர்வாகத்துக்கு வழக்குச் செலவை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.