உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை

Report Print Ashik in அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த சம்பவத்துக்கு இன்னும் அரசோ, அரசியல்வாதிகளோ நீதியானதும், உண்மையானதுமான விசாரணைகளை மேற்கொள்ளாது இருப்பதையிட்டு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது கவலையை தெரிவித்துள்ளது.

நீதி நேர்மையுடன் பக்கச் சார்பற்ற முறையில் விசாரணைகளை மேற்கொள்வது கட்டாயத்தேவையாக இருக்கின்றது என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தி நிற்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு ஆலய பெருவிழா நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போது தனது மறையுரையில் ஆண்டகை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் சூழல் குறித்து அறிக்கை ஒன்றை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ளது.

இத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பில் விசாரணை செய்து நீதியின் முன் கொண்டு வருமாறு நாம் தாழ்மையுடன் அரசை கேட்டிருந்தோம்.

ஆனால் இது விடயமாக நீதியான உண்மையான எதுவும் இன்னும் இடம்பெறவில்லை. இது விடயமாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்து நிற்கின்றது. பாதுகாப்புக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்பதையும் நாம் கேட்டு நிற்கின்றோம்.

நாம் இந்த அரசாங்கத்திடமும் அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாவது நீதி, நேர்மையுடன் பக்க சார்பற்ற முறையில் விசாரனைகளை மேற்கொள்வது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.

அத்துடன் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு நாம் நன்றி கூறி நிற்பதுடன் மீண்டும் அரசை வேண்டி நிற்பது நீதியான உண்மையான விசாரணையை மேற்கொள்ளும் படியும் நடந்த சம்பவத்துக்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும், குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வர வேண்டும் எனவும் நாம் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம்.

ஆகவே அன்பின் பிள்ளைகளே, பக்தர்களே நாம் நாட்டின் நலன் குறித்து மரியன்னையிடம் கையேந்துவோம் மன்றாடுவோம். செபமாலை மாதா நிச்சயம் நமக்கு உதவி புரிவார் என்பது திண்ணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers