இலகுகடனை தொடர்ந்தும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க புதிய அரசாங்கம் தீர்மானம்! நிதியமைச்சு அறிவிப்பு

Report Print Sujitha Sri in அறிக்கை

நடைமுறையிலுள்ள இலகுகடன் முறையை மீளாய்வு செய்து புதிய கட்டமைப்பின் ஊடாக தொடர்ந்தும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க புதிய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மக்களையும், முதலீடுகளையும் வலுவடைய செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே இதன் முக்கிய குறிக்கோள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள இலகுகடன் முறை தொடர்பில் ஊடகங்களில் வெளிவரும் பல்வேறு கருத்துக்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்போதே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும்,

நடைமுறையிலுள்ள இலகுகடன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்வாண்மையாளர்கள் அதிக பயனை அடைந்துள்ளனர். இது பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளதாக புதிய அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டு வரும் கடன் யோசனைத்திட்டமானது நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு மிக அவசியமானது என்பதால், அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் புதிய அரசாங்கம் தெளிவாகவுள்ளது.

நாளடைவில் இக்கடன் திட்டத்தை மிகவும் பரவலான முறையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.