அதாவுல்லா தெரிவித்துள்ள விடயம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கவலையடைய செய்துள்ளது

Report Print Theesan in அறிக்கை

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, மலையக மக்களை கொச்சைப்படுத்தி பேசியிருப்து கண்டிக்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயத்தை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமகால அரசியல் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மலையக மக்களை இழிவுப்படுத்தும் வகையான சொல்லாடலை பயன்படுத்தியிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இலங்கை நாட்டினுடைய தேசிய வருமானத்தின் முதுகெலும்பாக திகழும் மலையக மக்களை இவ்வாறு இழிவுப்படுத்துவதென்பது மலையக மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் வேதனையையும், கவலையையும் அடையவைத்துள்ளது.

மலையக மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்கள். அவ்வாறனவர்களை கொச்சைப்படுத்துவதை தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

மேலும் மலையக தமிழ் மக்களை கொச்சைப்படுத்தி பேசியதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இவ்வாறு கண்டனங்களை தெரிவிப்பதற்கு எந்தவித அருகதையும் கிடையாது.

ஏனெனில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சியில் வாழும் மலையக மக்களை மிக இழிவான வார்த்தை பிரயோகத்தின் மூலம் விழித்திருந்தார்.

இவ்விடயம் சமூகவலைத்தளங்களில் பரவலாக வந்திருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் பங்காளி கட்சிகளும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டமைப்பின் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக எந்தவித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

அன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மலையக மக்கள் தொடர்பில் கீழ்த்தரமான சொற்பிரயோகத்தை மேற்கொண்டமைக்கு கண்டனத்தை வெளியிட்டிருந்தால் இன்று அதாவுல்லா இவ்வாறு பேசியிருக்க சந்தர்பம் ஏற்பட்டிருக்காது.

தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினையை விதைக்கும் வகையிலான அரசியல் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Latest Offers