வன்னி மாவட்ட பட்டதாரிகளுக்கான விஷேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு

Report Print Theesan in அறிக்கை

வன்னி மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்குமான விஷேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் காலை 10 மணிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இக்கலந்துரையாடலில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸின் ஆளுமை, அனுபவப்பகிர்வு, வன்னி மாவட்டத்தில் அபிவிருத்தயை முன்னெடுத்தல், இப் பாரிய செயற்பாட்டிற்கு துறை சார்ந்த ரீதியில் அனைத்துப்பட்டதாரிகளும் பங்களிப்பை உறுதி செய்தல், பட்டதாரி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகள் கடந்த பத்து வருடங்களாக நிர்வாக ரீதியில் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுதல், வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் உடனடியாக நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கத்தினூடாக முன்னெடுத்தல், வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினை செயற்திறன் கொண்ட அமைப்பாக உருவாக்கும் பொருட்டு பேராசியர் மோகனதாஸின் நேரடி கண்காணிப்பின் கீழ் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கான அபிவிருத்திக்கான இணைப்புப் பட்டதாரிகள் சங்கத்தை உருவாக்குதல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் இடம்பெறவுள்ளன.

எனவே இவ்விஷேட கலந்துரையாடலுக்கு வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 2007-2019 வரை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய அனைத்து பட்டதாரிகளையும் தவறாமல் சமூகமளிக்குமாறு வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.