வீரர்களை காப்பாற்றுமாறு உலக நாடுகளிடம் கோரும் நிலை மீண்டும் வராதென எண்ணாதீர்கள்!

Report Print Theesan in அறிக்கை

ரெலோ அமைப்பு எடுத்துள்ள புதிய நகர்வு இனப் பிரச்சினைக்கு குந்தகமாக அமையும் என தமிழ் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்றைய தினம் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் மேலும்,

எமது மக்களுக்கும் உங்களுக்கும் தொடர்புடைய பல விடயங்கள்பற்றி எதுவித விமர்சனங்களும் செய்யாது மிகவும் பொறுமையாக இயங்கி வந்தேன். நீங்கள் ஒரு திறமைசாலி. அதில் சந்தேகமில்லை.

ஆனால், உங்களுடைய திறமையை உங்களுடைய சொந்த நலனுக்கு மிகவும் பயன்படுத்தியுள்ளீர்கள். அதனால் எமது மக்களுக்கும் பெருமளவில் நாட்டுக்கும் அழிவு ஏற்பட்டது.

மிக மிக அக்கறையுடன் ஆரம்ப காலத்திலிருந்து மக்களால் அனுசரித்து பேணிக்காத்த ஜனநாயகத்தை சுட்டு விழுத்தியவர் நீங்களே!

புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கும் நோக்கத்தோடு ரெலோ அமைப்பு எடுத்துள்ள நடவடிக்கை, நாட்டிற்கு அழிவைக் கொண்டுவந்த தங்களுடைய கடந்தகால நடவடிக்கைகளை கவனத்தில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

யாரேனும் ஒரு கட்சியை பிளவுபடுத்த அல்லது புதிதாக ஆரம்பிக்க தங்களுடைய முடிவை மீளப் பரிசீலனைசெய்து நேர்மையாக இயங்கும் தார்மீக கடமையும், உரிமையும் கொண்ட இருபெரும் தமிழ்த் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைவதுபற்றி பரிசீலிக்க வேண்டும்.

இவ்விரு தலைவர்களும் காலத்தின் தேவைக்கேற்ப நாட்டிற்குப் பொருத்தமாக அமைந்தனர். ஜனநாயகத்தை முதலில் சுட்டுவீழ்த்தியவர்கள் நீங்களே என்பதோடு தமிழர் விடுதலைக் கூட்டணியையும் முற்றாக அழிக்க மிகவும் பாடுபட்டீர்கள்.

நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரைகள் சிலவற்றை எனக்கு பக்கத்தில் இருந்து கேட்ட உங்களுக்கு இப்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். பாதுகாப்பு அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தை எதிர்ப்பக்கத்தில் அமர்ந்திருந்தார்.

அவரைப் பார்த்து நீங்கள் 10 ஆண்டுகள் போராடினாலும் பளையை கைப்பற்ற முடியாதெனச் சொன்னேன். ஆனையிறவு முகாமைக் கைப்பற்றுவது பகற்கனவெனவும் குறிப்பிட்டேன்.

மேலும் இன்னுமொரு தடவை எமது 35,000 போர்வீரர்களை காப்பாற்றித் தாருங்கள் என உலக நாடுகளிடம் கோரிக்கைவிட வேண்டிய நிலைமை மீண்டும் ஏற்படாது என எண்ணாதீர்கள்!

ஒரு சமயம் நாடாளுமன்றத்திலே யசீர் அரபாத் போன்று பிரபாகரனும் உலகம் சுற்றி வருகின்ற காலம் விரைவில் வரும் எனவும் குறிப்பிட்டேன்.

பிரபாகரனின் சில வன்முறையோடு சம்பந்தமான நடவடிக்கைகளை கண்டித்துள்ளேன். அவருடைய சொந்த நலன் கருதியே அடிக்கடி இத்தகைய சில குற்றங்களை சுட்டிக்காட்டியுள்ளேன்.

ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்களுடன் இருந்துகொண்டு அவர்களின் எல்லா செயற்பாடுகளையும் உசுப்பிவிட்டு அவர்களைத் தோற்கடித்த இராணுவத் தளபதி ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சி வேட்பாளராக போட்டியிட்டபோது வீடுவீடாகச் சென்று அவருக்கு வாக்குச் சேர்த்து கொடுத்தீர்கள்.

விசுவாசமாக இருந்து நான் துரோகம் செய்தேனா அல்லது வேறுயாரும் செய்தார்களா என்பதை இப்போதாவது கூறுங்கள். திருகோணமலையில் 14.05.1972இல் தமிழர் விடுதலைக் கூட்டணியுடைய அங்குரார்ப்பண நிகழ்வில் இரு கட்சிகளையும் சார்ந்த சகலரும் வேறு சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஆரம்பகால உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இடதுசாரிக் கட்சிகளும், ஆயுதக் குழுக்களின் அரசியல் பிரிவுகளும் எம்முடன் இணையவில்லை. இந்த இணைப்பு உலகளாவிய தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமைக்காக ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் நகர்வாக கொண்டாடப்பட்டது.

அந்தக் காலத்தில் நீங்கள், நான் அறிய அரசியலில் இல்லை. மேலும் காலையில் நடைபெற்ற உத்தியோகத்தர்கள் தெரிவின்போது அதில் கலந்துகொள்ளவுமில்லை. ஆனால், அன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் பட்டுவேட்டியுடன் நீங்கள் கலந்துகொண்டதை நான் அவதானித்தேன்.

1977ஆம் ஆண்டு தான் கூட்டணி அமைந்ததன்பின் நடந்த பொதுத்தேர்தலில் நீங்கள் திருகோணமலையில் வேட்பாளராக நிறுத்தப்பட்டீர்கள். இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் அ.தங்கத்துரையாவார்.

இரட்டைத் தொகுதியான மூதூர் தொகுதி தனித்து 2 தொகுதிகளாக மூதூர், சேருவல என பிரிக்கப்பட்டபோது திருகோணமலைத் தொகுதிக்கு நியமிக்கப்படவிருந்தும் அவர் நியமிக்கப்படாதது இன்றுவரை ஒரு மர்மம்.

தற்போதைய மூதூர்த் தொகுதி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதியாகும். அதேபோல சேருவில சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதியாகும்.

60 வருட அரசியல் வாழ்வில் 48ஆண்டுகள் கூட்டணியில் இருந்து வருகிறேன். ஆனால், நீங்கள் மிகமுக்கியமான கட்டத்தில் 2004ஆம் ஆண்டு கூட்டணியை விட்டு விலகி வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டீர்கள்.

எனக்குத் தெரிந்தமட்டில் தமிழரசுக் கட்சி தமிழ்க் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்ததுடன் தமிழரசுக் கட்சி செயலிழக்கப்பட்டது.

மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் கூற்றுப்படி தனது கணவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்துகொண்டே தமிழரசுக் கட்சியை வேறு எவரும் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்பதற்காக பதிவில் வைத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சி முழுக்க முழுக்க அகிம்சையைக் கொள்கையாகக் கொண்ட கட்சியாகும். மிகவும் பிரபல்யமான விடுதலைப் புலிகள் சார்பான ஊடகவியலாளர் தராகி என அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராம் மிகத் தெளிவாக தமிழரசுக் கட்சியின் பதிவு வெற்றுப் பத்திரிகையில் மட்டும்தான் எனக் கூறியிருந்தார்.

நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை விடுதலைப் புலிகளின் அரசியல் அங்கமாக சேர்க்க பெரும் பிரயத்தனம் செய்தீர்கள். அதற்கு நான் சம்மதிக்காது இந்த வாய்ப்பை உபயோகித்து விடுதலைப் புலிகளை நியமித்தால் அவர்கள் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு உதவும் எனக் கருதினேன்.

எனது ஆலோசனைக்கு திருப்தியடையாத நீங்கள் எவருக்கும் தெரிவிக்காமல் தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு விலகி மாவை.சேனாதிராஜாவுடைய சாதுரியத்தால் தமிழரசுக் கட்சியின் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டீர்கள்.

நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்தவுடன் விடுதலைப் புலிகளின் சார்பில் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்படுகிறதென அறிவித்தீர்கள். கலந்தாலோசிக்காது நீங்கள் கட்சியை விட்டுப் போனமையால் எங்களுக்கு வேறு வழியின்றி சுயேட்சையாக போட்டியிட்டோம்.

அதன்பின் உங்களுடைய குழு வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியற்குழுத் தலைவர் சு.ப.தமிழ்செல்வனுடைய அனுசரணையுடன் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் தேசியத் தலைமையாகவும், ஏகப்பிரதிநிதிகளாகவும் ஏற்றுக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியீட்டிருந்தீர்கள்.

உதயசூரியன் சின்னத்தை நான் கொண்டு ஓடிவிட்டேன் என்று வெளிநாட்டிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டேன். ஆனால், கூட்டணியை இயங்கவிடாமல் செய்து உதயசூரியன் சின்னத்தை குழிதோண்டிப் புதைத்தவர் நீங்களே!

2004ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் 22 ஆசனங்களை எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். காலையில் தோல்வியாக இருந்த சேனாதிராசா மாலையில் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பது உண்மையில்லையா? இன்னும் ஒருவேட்பாளர் இலங்கைத் தேரதல் வரலாற்றில் எவருக்கும் கிடைக்காதளவு 115,000 வாக்குகளைப் பெற்றார்.

வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்தல் உட்பட ஏனைய பிரச்சாரங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தக் குறைபாடுகளுடன் 22 ஆசனங்களில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தின் முழுக் காலம் 6 வருடமும் வசதியாக பதவியை அனுபவித்தீர்கள்!

உங்களுடைய தெரிவும், ஏனையோரின் தெரிவும் மோசடி மூலமானவை என்பதை நீங்கள் அறிவீர்கள்! நாடாளுமன்றப் படிகள் ஏறுவதற்கு உங்களுக்கு தார்மீக உரிமை கிடையாது.

நீங்கள் விடுதலைப் புலிகள் சார்பாக போட்டியிடுவதாக ஏற்கனவே தெரிவித்து விட்டீர்கள். ஆகவே, உங்களுடைய பட்டியலில் தெரிவானவர்கள் அத்தனைபேரும் விடுதலைப் புலிகளின் வேட்பாளராக கணிக்கப்பட்டனர்.

ஆகவே, எல்லா வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் ஒரே கட்சியின்கீழ் போட்டியிட்டு ஜனநாயக கோட்பாடுகளுக்கு திரும்ப இருந்தவேளை நீங்கள் திட்டமிட்டு விடுதலைப் புலிகள் ஜனநாயகத்திற்கு திரும்புவதை தடுத்துள்ளீர்கள்.

இந்த முடிவு விடுதலைப் புலிகளுடையதே என்பதை தராகி வெளிப்படையாக கூறியிருந்ததை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா அமைப்புக்களையும், பலவிதமான முயற்சிகள் எடுத்து ஒரு கொடியின் கீழ் கொண்டுவருவது மிகப்பெரிய சவாலாகும்.

இந்த வழியில் செல்லவிடாமல் உங்கள் முட்டாள்தனமான முடிவின் பயனாக 5 ஆண்டுகள் 2004 – 2009 வரை யுத்தத்தை நீடிக்க வழிவகுத்தது.

இதன்விளைவாக 500 உயிர்கள் பலியாகியதும், 1500இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததும் உங்களுக்குத் தெரியாததா? இவர்களில் எவருக்கேனும் ஒரு ஆறுதல் வார்த்தையேனும் கூறினீர்களா? என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers