சுதந்திரதின கொண்டாட்டத்தில் சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம்! வவுனியா பிரஜைகள் குழு வரவேற்கிறது

Report Print Theesan in அறிக்கை

இலங்கையின் புதிய அரச அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், நடத்தப்படவுள்ள இலங்கையின் 72ஆவது சுதந்திரதின கொண்டாட்டத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

இந்த முடிவு தமிழ் மக்களுக்கு எத்தகைய மனக்கசப்பையும், நெருடலையும் தரவில்லை. மாறாக அளவற்ற மகிழ்ச்சியையே தருவதாகவும், இந்த முடிவுக்கு அமோக வரவேற்பு அளிப்பதாகவும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

இலங்கைக்குள் உலக சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட மூவகைத் தேசிய இனங்கள் உண்டு. இனத்துவ அடையாளங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த மூவகை தேசிய இனக் குடிமக்களும், தங்களுக்கே உரித்தான வெவ்வேறானதும், தனித்துவமானதும் ஆன கலைகள், கலாச்சாரங்கள், உணவுப் பாரம்பரியம், உடைப் பாரம்பரியம், மொழிப் பண்பாடு, சமய அனுட்டானங்கள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், பூர்வீக நிலபுலவழித் தொடர்புகள், வர்த்தக வாணிப மார்க்கங்கள், ஆட்சி முறைகள், கொடிகள், குறியீடுகள், மரபுரிமைகள் என்று பலவற்றையும் கொண்டுள்ளனர்.

ஆகவே, தமிழ்த் தேசிய இனத்துக்கு என்றும் சங்க கால இலக்கியங்கள் உண்டு. போர்க்காலப் பாடல்கள் உண்டு. இதிகாசங்கள் உண்டு. காப்பியக் கதைகள் உண்டு.

வெற்றியும் தோல்வியும், சூழ்ச்சிகளும் துரோகங்களும் நிறைந்து கிடக்கும், எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்டிருக்கும் வரலாறுகளும் உண்டு. நாமும் நமக்கென்று ஓர் நலிவடையா கலைகளை கொண்டுள்ளோம்.

எங்கள் கதைகள் கற்பனைகள் இல்லை. எங்கள் கண்ணீர் ஒப்பனைகள் இல்லை. எங்கள் இரத்தம் கலப்படம் இல்லை. ஆதலால் எங்கள் வாழ்வை, எங்கள் வலிகளை, எங்கள் வரலாற்றை, எங்கள் மொழியில் நாமே பதிவாக்குவோம். பாடுவோம், ஆடுவோம், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம். முடி சூடுவோம்.

எனவே, அரச அதிபர் கோத்தபய ராஜபக்சவும், அவரது அமைச்சரவை பரிவாரங்களும் விரும்புவதைப் போலவே, சிங்கள தேசிய இனக் குடிமக்கள் தங்களுக்கென்றே உரித்தான தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடித் தான் ஆக வேண்டும்.

அதில் வேற்றுத் தேசிய இனக் குடிமக்கள் அதிகாரம் செலுத்தவோ, அதை நிராகரிக்கவோ முடியாது. அதுபோலவே, தமக்கு மட்டுமே உரித்தான கீதத்தை மற்றைய தேசிய இனக் குடிமக்களை பாடச் சொல்லி நிர்ப்பந்திக்கவோ, திணிக்கவோ முடியாது என்பதையும் சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சியாளர்களுக்கு தலையில் குட்டிச் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

மேலும் இவ்வாறான சம்பவங்கள் எமக்கு புலப்படுத்தும் உண்மைகள் யாதெனில்,

1: இலங்கை பல்லின கலாசாரங்களையும் கொண்டிருக்கும் மக்கள் வசிக்கும் நாடு அல்ல. அதற்கு ஜனநாயக பண்புகள் என்று எவையும் கிடையாது. அது மனித உரிமைகளுக்கு கிஞ்சித்தும் மதிப்பளிக்காத, பெளத்த பேரினவாத சிந்தனைக்குள் ஊறி, உப்பி உருப்பெருத்து நாறிக்கிடக்கும், இனத்துவேசங்களால் நிரம்பி வழியும், பக்கச் சார்பை அதிகம் அதிகம் வெளிப்படுத்தும் ஒரு காட்டாட்சியை கொண்டிருக்கும் நாடு.

2: ஆகவே நாங்கள் ஒற்றையாட்சிக்குள் இவர்களோடு சேர்ந்து வாழ முடியாது. தமிழ்த் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து செல்வது தான் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பையும், இனப்பிரச்சினைக்கு உயரிய தீர்வையும் தரும்.

3: தமிழ் மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு பெருமெடுப்பில் தயாராக வேண்டும் என்பவையாகும்.

Latest Offers

loading...