தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடுமை, அனுபவப் பகிர்வும் அஞ்சலியும் - கு. சுரேன்

Report Print Theesan in அறிக்கை

46 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடுமைகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வில் சிறுவனாக கலந்து கொண்ட தமிழீழ விடுதலைஇயக்கத்தின் தற்போதைய தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி (சுரேன்) தனது அனுபவங்களை தனது அஞ்சலி அறிக்கையின் மூலம் பகிர்ந்துள்ளார் .

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,

இற்றைக்கு 46 வருடங்களுக்கு முன்னர் தமிழாராய்ச்சி மாநாட்டிலே அரங்கேறிய கொடுமையினால் உயிர்நீத்த அப்பாவி பொதுமக்களுக்கு என்னுடைய அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழ் தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து தமிழாராய்ச்சி மாநாட்டில் குழுமியிருந்தார்கள். அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையினால் சிதறுண்டு ஓடியவர்கள் ஆயிரக்கணக்கானோர்.

அதில் அப்பாவிகள் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்த அந்த பயங்கர சம்பவத்தை நான் நினைவு கூருகிறேன்.

எனது தந்தையும் அந்த ஏற்பாட்டுக் குழுவில் பங்கு பெற்றிருந்தார். ஆறு வயது சிறுவனாக நான் அந்த விழாவிலே மூன்று தெய்வங்கள் என்ற தலைப்பில் அன்று மாலை சிறிய உரை நிகழ்த்தி இருந்தேன்.

மேடையின் அருகில் எனது பேத்தியாரின் மடியில் இருந்த வேளை, திடீரென விளக்குகள் அணைந்து காரிருள் சூழ்ந்தது. சரமாரியாக வெடிச்சத்தங்கள் கேட்டன. மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு கூக்குரலிட்ட வண்ணம் நான்கு பக்கமும் சிதறி ஓடினார்கள்.

என்னையும் பேத்தியார் தூக்கிக்கொண்டு ஓடியது எனக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அந்த பயங்கரம் இன்னும் நெஞ்சைப் பிசைகிறது.

தமிழ் தேசியத்தின் எழுச்சிக்கு வழிகோலிய பெரும் பங்கு இந்த நிகழ்வுக்கும் உண்டு. அதில் உயிர் நீத்த உறவுகளுக்கு எனது அஞ்சலிகள். அன்று படுகாயமுற்று அல்லலுற்ற உறவுகளுக்கும் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.