2017 முதல் 2019 வரையில் வெளிநாடு சென்ற வட மாகாண அரச உத்தியோகர்களுக்காக சுமார் 3 கோடி ரூபா செலவு

Report Print Sujitha Sri in அறிக்கை

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வட மாகாணத்தில் 349 உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களையும், 2420 பேர் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் குறித்த காலப்பகுதியில் வட மாகாண அரச உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக மாத்திரம் 3 கோடியே 66 இலட்சத்து 30 ஆயிரத்து 339 ரூபா 25 சதம் செலவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

அதில் மேலும், வட மாகாணசபையின் கீழ் உள்ள நிர்வாகங்களில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டவர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறான உத்தியோகத்தர்களுக்கு நாளொன்றுக்கு 40 டொலர் விகிதம் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு 165 பேரும் , 2018ஆம் ஆண்டில் 119 பேரும், 2019ஆம் ஆண்டில் 65 உத்தியோகத்தர்களுமாக 349 உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதேநேரம் தனிப்பட்ட பயணம் மேற்கொள்பவர்களுக்கு 14 நாட்கள் மாத்திரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது.

அந்த வகையில் வட மாகாணத்திற்கு உட்பட்ட 2420 பேர் தனிப்பட்ட பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.