இருமுகத்துடன் செயற்படும் கூட்டமைப்பு : ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு

Report Print Yathu in அறிக்கை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களிடம் ஒரு முகத்துடனும் சிங்களவர்களிடம் வேறொரு முகத்துடனும் செயற்பட்டு வருகின்றது என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யுத்தம் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் அவர்களின் அபிலாசைகளுக்கும் ஒரு தீர்வை பெற்றுத்தராத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு பிறகும் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்குமாயின், அது தமிழ் மக்களின் சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் முதல் ஐந்து வருடம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியும், அடுத்த ஐந்து வருடம் மைத்திரி,ரணில் இணைந்த நல்லாட்சியுமாக மொத்தம் பத்து வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக சாதித்தது என்ன?

மக்கள் தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்காக தாங்களே போராடித்தான் பெற வேண்டும் என்றால் மக்களின் பிரதிநிதிகள் என்பவர்கள் எதற்காக? இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் மக்களும்,விடுதலைப்புலிகளும் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது தங்கள் தொலைபேசி இணைப்புக்களையும் நிறுத்தி வைத்துவிட்டு, புலிகளும், மக்களும் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

யுத்தம் முடிந்தபின் நாடாளுமன்றத்திற்கு வந்து, பயங்கரவாதத்தை முடித்து வைத்ததற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தொடர்ந்து 2010 , 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.

2010ஆம் ஆண்டு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சுமந்திரன் இருந்தபோது விடுதலைப் புலிகள் தான் இராணுவத்தினரை விட அதிகளவு பொதுமக்களை கொன்றார்கள் என்று கூறியிருந்தார்.

2015ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் சுமந்திரனை வெல்லவைக்க வேண்டும் என இரா.சம்பந்தன்கேட்டுக் கொண்டார், அதற்கமைவாக சுமந்திரன்நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

சுமந்திரனுக்கு விழுந்த ஒவ்வொருவாக்கும் விடுதலைப்புலிகள் தான் அதிகளவு தமிழ் மக்களை கொன்றார்கள் என்பதற்கு போதிய சான்றாகும். இந்த கூட்டமைப்பு எந்த அரசாங்கத்துடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி போர்க்குற்ற விசாரணையை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்லும்.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபொழுது விடுதலைப்புலிகளை கூண்டோடு அழிப்பேனென்றும்,பிரபாகரன் ஓடி ஒழிவதற்கிடமில்லாமல் ஆக்குவேனென்றும் கூறி யுத்தத்தை முடித்துவைத்தார். யுத்தம் முடிந்தபின் இராணுவத்தின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவேனென்றும் கூறினார். அந்த நன்றிக் கடனுக்காகத்தான் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது.

இப்படி தமிழ் மக்களிடம் ஒரு முகமும் சிங்கள தலைமைகளிடம் ஒரு முகமும் காட்டி,கபட நாடகம் ஆடும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குத்தான் தொடர்ந்தும் வாக்களித்து, தமிழ் மக்கள் அதன் விளைவையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

1977ஆம் ஆண்டு பிரதான எதிர் கட்சியாக தமிழர்விடுதலைக் கூட்டணி செயற்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றார். 1983ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசு, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமாக மக்களிடம் தேர்தலுக்கு செல்லாமல்,மேலும் ஆறு ஆண்டுகள் நாடாளுமன்றத்தை நீடித்தபோது இது மக்களின்ஆணையை மீறும் செயல் என்று கூறி, 1983ஆம்ஆண்டு நான் உட்பட 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எமது பதவிகளை துறந்தோம்.

இந்த ஜனநாயக செயற்பாட்டின் மூலம் சர்வதேசத்துக்கே முன்னுதாரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணி திகழ்ந்தது. அதனால் தான் 1987ஆம் ஆண்டு நடந்த வடமராட்சி தாக்குதலின் போது,எதுவித பதவிகள் இல்லாதபோதும், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஜனநாயக ரீதியிலான கோரிக்கையை ஏற்று இந்தியா தனது போர் விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை விநியோகம் செய்து தமிழ் மக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று உதவ முன்வந்தது. அதனைதொடர்ந்து மாகாண சபை அதிகாரங்களை இலங்கையில் அமுல்படுத்தி, இணைந்த வடகிழக்கு மாகாணசபையும் உருவாக்கம் பெற்றது.

2004ஆம் ஆண்டு கூட்டுச்சதியின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலை கூட்டணி நீக்கப்பட்டு, தமிழரசுக் கட்சி சேர்க்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டு 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஜனநாயக வரம்புகளை மீறி மோசடி மூலம் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அன்றே தொடங்கிவிட்டது தமிழர்களுக்கான அழிவு, அந்த காலகட்டத்தில் தான் இணைந்திருந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டது, இராணுவத்திற்கு சமமான பலமாக இருந்து,பேரம் பேசும் சக்தியாக திகழ்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பும் அழிக்கப்பட்டு,தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் வரை சென்று சொல்லொண்ணாத துன்பத்தை அடைந்தனர்.விடுதலைப் புலிகளின் முழு ஒத்துழைப்புடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் முற்றுமுழுதாக புலிகள் அழியும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

வடக்கிலிருந்து 40,000 இராணுவவீரர்களை சவப்பெட்டிக்குள் வைத்து அனுப்புவோம் என்று வீரவசனம் பேசியவர்களும் உள்ளார்கள். இதுவே தமிழ் மக்களுக்கான தமிழரசுக் கட்சியின் சாதனையுமாகும். தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அந்த தவறையே செய்து தமிழரசுக் கட்சியை ஆதரிக்கப் போகின்றார்களா? ஒரு மாற்றத்திற்கான தீர்வை இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்தினால் என்ன?

1972ஆம் ஆண்டு முப்பெரும் தலைவர்களான தந்தை செல்வா, சட்டமாமேதை ஜி.ஜி.பொன்னம்பலம், மலையகத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத்தான் தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான தார்மீகக் கடமையும், பொறுப்பும், தகுதியும் இருக்கின்றது. எனவே அனைத்து அமைப்பினரும் நடைபெறபோகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒருஅணியாக இணைந்து செயற்பட்டு ஒரு மாற்றத்தை காண்பது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.