தேசிய தலைவர்களில் ஒருவர் மனோ கணேசன்! த.தே.கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு காரணம் என்ன?

Report Print Sujitha Sri in அறிக்கை

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதை தவிர்த்து, சமூக பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரிவர நிறைவேற்றியுள்ளமை வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மனோ கணேசன் வெறுமனே கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல, அவர் தேசிய தலைவர்களில் ஒருவர் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்கு புரிந்து வைத்திருக்கின்றது.

வாக்குகள் பிளவு படுவதை தடுத்து மனோவின் வெற்றியை உறுதிப்படுத்திடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் களம் இறங்குவதை தவிர்த்துக்கொண்டுள்ளது.

அதன் மூலம் தமது சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர நிறைவேற்றியுள்ளமை வரவேற்கத்தக்கது. இது எமது வடக்கு - தெற்கு உறவை மேலும் பலப்படுத்துவதாக அமையும்.

மனோ கணேசன் தேசிய அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகித்துவருகின்றார். ஐக்கிய தேசிய முன்னணி "நல்லாட்சியை" ஏற்படுத்தியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.

இன்று மீண்டும் தேசிய அரசியல் சக்தி ஒன்றை உருவாக்கும் பணியில் முக்கிய இடம் வகிக்கின்றார். அதன்படி நாளைய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் "ஐக்கிய மக்கள் சக்தி" யின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு அவருக்கு உண்டு.

இவ் முன்னெடுப்பு சிறுபான்மை சமூகத்தின் நாளைய நாளை தீர்மானிக்கும் அடித்தளமாகும். இம் முக்கியத்துவத்தை கொழும்பில் சில குட்டி அரசியல் அனாதைகள் அறியாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் நன்கு அறிவார்கள்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் அல்லாது எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவர்களில் ஒருவராகவும் மனோ கணேசன் முன் வரிசையில் அமர்வார்.

அதற்கு சவால் விட எந்த சக்தியும் இல்லை. ஏனெனில் எம்மோடு இருப்பது மக்கள் சக்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.