சம்பந்தன் மற்றும் சுமந்திரன் இருவரையும் தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கமுடியுமா? ஆனந்தசங்கரி கேள்வி

Report Print Gokulan Gokulan in அறிக்கை
130Shares

இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் இருவரையும் தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கமுடியுமா? என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் தன்னுடைய கட்சி சார்ந்த விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தால், அது அவர் கட்சியின் பிரச்சினை என்று எனது கருத்தை கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது, ஆனால் அவர் என்னையும் சுமந்திரனயும் ஒப்பிட்டு என்னை விட ஒரு மோசமான கருத்தை சுமந்திரன் கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆனால் சுமந்திரன் கூறிய கருத்து வெளிப்படையானது, நேர்மையானது என்று சம்பந்தன் கூறியுள்ளார். அப்படியானால் குலநாயகத்தின் கூற்றுப்படி என்னைவிட மோசமான கருத்தைக்கூறிய சுமந்திரனின் கருத்தை சம்பந்தன் வெளிப்படையானது, நேர்மையானது என்று கூறுவாராயின், என்னுடைய கருத்தும் மிக வெளிப்படையானதும், மிக நேர்மையானதும் என்று சம்பந்தனே ஒத்துக்கொள்ள வேண்டும்.

2004ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆக இருந்த என்னை, தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் பட்டியலை, விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் மறைந்த சு.ப.தமிழ்செல்வனிடம் கொடுத்து, எனக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும்படி மிரட்டப்பட்ட நபர்களில் குலநாயகமும் ஒருவர்.

மிரட்டலுக்கு அடிபணியாது தன்னுடைய மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர், இன்றைய தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம். மிரட்டலுக்கு அடிபணிந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை குலநாயகம் அவர்கள் கொண்டு வந்தார்.

உயிர் மீது ஆசை உள்ள சாதாரண மனிதர்களின் செயற்பாடு அது. அதற்காக அவர் மீது குற்றம் காணமுடியாது. ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப் படாமலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து குலநாயகம் உட்பட மிரட்டலுக்கு அடிபணிந்த உயிருக்கு பயந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். துணிந்தவர்கள் தொடர்ந்தும் இன்று வரை என்னுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியிலேயே பயணிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ளாத படியால் தான் குலநாயகம் போன்றோர் விடுதலைப்புலிகளை திருப்திப் படுத்துவதற்காக நான் கூறாத பொய்யான தகவல்களை திரித்துக் கூறினார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஏக பிரதிநிதித்துவம் என்பது சர்வாதிகாரத்துக்கான சொற்களாகும்.

ஈழத்து காந்தி என்று அழைக்கப்பட்ட ஜனநாயக வாதியான தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட உன்னதமான கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணி. அந்த கட்சியின் தலைவராகிய நானும் இன்றுவரை ஒரு ஜனநாயக வாதியாகவே இருந்து வருகின்றேன்.

என்னால் சர்வாதிகார கருத்துக்களை ஏற்றக்கொள்ள முடியாது. இருந்தும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை சம்பந்தமாக விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச வேண்டும். ஏனைய விடயங்களுக்கு அது பொருந்தாது என்ற கருத்தை அன்று நான் வலியுறுத்தி வந்தேன்.

இந்திய சுகந்திர போராட்ட நேரத்தில் மகாத்மா காந்தியையும், மூத்தறிஞர் இராஜாஜீ அவர்களையும் ஒப்பிட்டு குலநாயகம் இராஜாஜீயின் அரசியல் நாகரிகத்தை விளக்கியுள்ளார். அவ்வாறு தான் நானும் அரசியல் நாகரிகத்துடன் செயற்பட்டு வருகின்றேன்.

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் முக்கியமான மகாத்மா காந்தியின் தலைமையிலான அகிம்சை ரீதியிலான அணியும், நேத்தாஜீ சுபாஸ்சந்திரபோஸ் தலைமையிலான ஆயுதம் தாங்கிய அணியும் போராட்ட களத்தில் இருந்தன.

சுபாஸ்சந்திரபோஸ் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், மகாத்மா காந்தியின் அணியிலுள்ளவர்கள் மீது ஆயுத பலத்தை பிரயோகிக்கவில்லை. இருவரும் தனித்தனி வழியில் சுகந்திரத்திற்காக போராடினார்கள். அதனால் தான் இந்தியாவின் சுகந்திரப் போராட்டம் வெற்றி பெற்றது.

சுமந்திரன் கூறிய கருத்தை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொள்வார் என எனக்கு தெரியும். அதனால்தான் நான் சமீபத்தில் சுமந்திரன் கூறிய கருத்தை பாராட்டினேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் விடுதலைப் புலிகள் இருக்கும் வரை சம்பந்தனின் கருத்திற்கு உடன்பாடானவர்களாக இருந்தும் தங்களுடைய கருத்துக்களை மூடி மறைத்து விட்டு புலிகளை அழிப்பதற்காக கூட இருந்தே குழிபறித்தார்கள்.

அதனால் தான் யுத்தம் முடிந்த பின் சம்பந்தன் பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக, அன்றைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

புலிகளை கூண்டோடு அழித்து விட்டேன் என்று வீராப்பு பேசிய, சரத்பொன்சேகாக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவும் தெரிவித்தனர். இது தான் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மையான நிலைமை, இதைத்தான் சுமந்திரன் அன்று கூறினார்.

காலம் தாழ்த்தியாவது உண்மையை ஒத்துக்கொண்டு, சம்பந்தனினதும் கூட்டமைப்பினதும் உண்மைத் தன்மையை தெளிவு படுத்தியதற்காக, சுமந்திரனை நான் பாராட்டினேன். இது மற்றவர்களால் வேறுவிதமாக பார்க்கப்பட்டு என் மீது விமர்சனங்கள் வந்தன.

சுமந்திரன் கூறியது சரி என்று சம்பந்தனும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் சம்பந்தன் மீது எந்த விதமான விமர்சனங்களும் இது வரை வரவில்லை. இது 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே' என்ற வரிகளுக்கு வலுவூட்டுவதாகும்.

சுமந்திரன் கூறிய கருத்துக்களும், அதை நியாயப்படுத்தி இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கைகளும், எவருடைய தனிப்பட்ட கருத்துக்களாக பார்க்க முடியாது. ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாகவே பார்க்க வேண்டும். ஏனெனில் இருவரும் கூட்டமைப்பில் முக்கிய பதவிகளை வகிக்கின்றார்கள்.

துணிவிருந்தால் ஜனநாயக வாதியான தந்தை செல்வாவின் பெயரை சொல்லிக்கொண்டு, வேடிக்கை பார்க்காமல் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், இரா.சம்பந்தனையும், சுமந்திரனையும் கட்சியில் இருந்து நீக்கவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அப்படி செய்தால் தமிழரசுக் கட்சி குலநாயகம் குறிப்பிடும், இன விடுதலை மற்றும் சுகந்திரத்தை நோக்காக கொண்டு செயற்படுகின்றது என்பதை தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதை செய்து விட்டு அடுத்த அறிக்கைக்கு தயாராகுமாறு குலநாயகம் அவர்களை நான் பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.