எம்.சி.சி உடன்படிக்கை விவகாரம்! ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in அறிக்கை

எம்.சி.சி என்ற மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் நிதி தொடர்பில் பேராசிரியர் லலித்சிறி குணருவன் தலைமையிலான ஜனாதிபதியின் நிபுணர் குழு சுமத்திய குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கையின்படி 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் செய்துக்கொள்ளப்பட்ட எம்.சி.சி உடன்படிக்கைகளின் கீழ் 10 மில்லியன் டொலர்களை அப்போதைய அரசாங்கம் பெற்றுக்கொண்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்காக எவ்வித கணக்குகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்தக்குற்றச்சாட்டை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமும் மறுத்திருந்தது. குறித்த நிபுணர் குழுவின் அறிக்கையினது நம்பிக்கைத்தன்மையையும் தூதரகம் கேள்விக்கு உட்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் பொதுஜன முன்னணி கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் வாக்காளர்களை திசைதிருப்பும் வகையில் இந்தக்குற்ற்ச்சாட்டை சுமத்தியிருந்ததாக ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காலத்தின்போது இலங்கை அரசாங்கத்துக்கு உலகவங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட நாடுகளும் அமைப்புக்களும் நிதியுதவிகளை வழங்கின.

எனினும் அதனை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதில் இருந்து தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவின் எம்.சி.சி என்ற மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் நிதி உடன்படிக்கையை செய்துக்கொள்வதா? இல்லையா? என்பதை அரசாங்கம் பகிரங்கமாக வெளிப்படுத்தவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தமது அறிக்ககையில் கோரிக்கை விடுத்துள்ளது.