வடக்கு, கிழக்கு பிரதேசம் தமிழரின் பூர்வீக தாயகம்! இது பிரபாகரனின் கோஷம் மட்டும் அல்ல

Report Print Gokulan Gokulan in அறிக்கை

ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட கிழக்கு தொல்லியல் பாதுகாப்பு எனும் தனிச் சிங்களவர்கள் 11 பேரை கொண்ட செயலணியில் ஒருவரான எல்லாவல மேத்தானந்த தேரர் தமிழர்களின் வரலாறுகள் தெரியாமல் ஊடகங்களுக்கு தவறாக உளருவதாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைவர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தேரரின் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசம் அன்று தொட்டு தமிழரின் பூர்வீக தாயகம் என்பது வரலாற்று உண்மை இதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இருப்பினும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வேண்டும் என்பதற்காக தமிழர் வரலாறுகளை மறைக்க நினைப்பது நியாயமற்றது.

இதன் அடிப்படையிலேதான் கிழக்கில் தொல்லியல் பாதுகாப்பு என்ற பெயரில் முற்று முழுதாக கிழக்கு மாகாணத்தை கபளிகரம் செய்ய நினைக்கும் பௌத்த பேரினவாதிகளையும் இவர்களுக்கு உடந்தையாக செயற்படும் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய உட்பட கிழக்கு தொல்லியல் பாதுகாப்பு செயலணியில் உள்ள அனைவரையும் கடுமையாக எதிர்ப்பதோடு ஒன்றை தெளிவாக கூறிக் கொள்கின்றேன்.

வடக்கு, கிழக்கு தமிழரின் பூர்வீகம் என்பது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் கோஷம் அல்ல. அது ஒட்டு மொத்த தமிழர்களின் மரபுசார் வாழ்வியல் பிரதேசமாகும்.

இப் பிரதேசத்தை தமிழர்களாகிய எங்களிடமிருந்து சிறிது சிறிதாக பலவழிகளாலும் கபளிகரம் செய்த போது இதை எதிர்த்தும், கண்டித்தும் பல தமிழர்களும், அரசியல்வாதிகளும் அகிம்சை ரீதியாக வீதிகளில் இறங்கி போராடினார்கள் ஆனால் சிங்கள பேரினவாதிகள் இதை எல்லாம் ஏற்க மறுத்து தங்களது அராஜகங்களை மேலும் அதிகரித்து கொண்டு சென்றதால் தான் மாற்றுவழியாக ஆயுத ரீதியில் தடுத்து நிறுத்திய அன்றைய இளைஞன் தான் இன்றைய எங்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தேசிய தலைவர் வே.பிரபாகரன் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தார் என்னும் எல்லாவல மேத்தானந்த தேரரின் கருத்தை அடியோடு மறுத்து மாறாக தேசிய தலைவர் முன்னெடுத்த போராட்டமானது சிங்கள பேரினவாத சக்திகளிடம் இருந்து எம்

மக்களையும், எம் உரிமைகளையும், எம் மண்ணையும் பாதுகாத்து மீட்டெடுக்கும் ஒரு உன்னதமான விடுதலைப் போராட்டமேயன்றி தேரர் கூறுவது போன்று பயங்கரவாத செயற்பாடு அல்ல, தேரர் அவர்கள் தேவையின்றி உளருவதை நிறுத்த வேண்டும்.

ஆகவே தற்சமயம் மீண்டும் கிழக்கை கபளிகரம் செய்வதற்காக ஜனாதிபதி அவர்களால் தனிச் சிங்களவர்களை வைத்து மட்டும் உருவாக்கப்பட்ட கிழக்கு தொல்லியல் பாதுகாப்பு செயலணி உடனடியாக கலைக்கப்பட வேண்டும் அல்லது இந்த செயலணியில்

பெரும்பான்மையாக தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும் இல்லையல் எதிர்வரும் காலங்களில் இச் செயலணி கலைக்கப்படும் வரை இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடரும் என்பதை நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கும் செயலணியில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.