மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க முடியும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை செய்வதற்கு சட்டமா அதிபர் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அரசியலமைப்பின் 89 மற்றும் 91 பிரிவுகளின்படி பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்றத்துக்கு செல்ல தகுதியற்றவர் என்றும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது என்றும், சட்டமா அதிபர் ஏற்கனவே சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.
எனினும் பிரேமலால் ஜெயசேகரவின் முறையீட்டை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரேமலால் ஜெயசேகரவவை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற அனுமதிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.
இதன்படி பிரேமலால் ஜெயசேகரவும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.
இதனை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
அத்துடன் 1982ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் குட்டிமணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்த போதும் அவருக்கு நாடாளுமன்றத்துக்கு வரும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.