20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட்ட சுமார் 120 அரச நிறுவனங்களுக்கு கணக்காய்வில் இருந்து விலக்களிக்கப்படும்.
இதனை தவிர லங்கா மின்சார நிறுவனம், இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனம், லங்கா ஹொஸ்பிட்டல், லிற்றோ கேஸ், லங்கா சத்தோச, லங்கா கோல் நிறுவனம் என்பனவும் கணக்காய்வில் இருந்து விடுபடும் சந்தர்ப்பம் ஏற்படும்.
எனவே 20ஆவது திருத்தத்துக்கு தாம் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக கணக்காய்வு சேவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின்படி கணக்காய்வாளர் நாயகம் ஒருவர், அரச திணைக்கங்கள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், அமைச்சரவை அமைச்சர்களின் அலுவலங்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள், 50 வீத அரச முதலீட்டைக் கொண்டுள்ள நிறுவனங்கள் என்பவற்றை கணக்காய்வுக்கு உட்படுத்த முடியும்.
எனினும் 20ஆவது திருத்தம் இந்த நிறுவனங்களின் கணக்காய்வை கணக்காய்வாளர் நாயகத்தினால் மேற்கொள்ள முடியாத நிலையை உருவாக்கும் என்று கண்காய்வு சேவை சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
20ஆவது திருத்த யோசனையின்படி தேசிய கணக்காய்வு சேவை ஆணைக்குழு ரத்துச்செய்யப்படுகிறது.
எனினும் அதற்கான மாற்று யோசனைகள் முன்வைக்கப்படவில்லை என்பதையும் கணக்காய்வு சேவை சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.