ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Report Print Steephen Steephen in அறிக்கை

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி மற்றும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப் பகுதி வரை இலங்கையின் நிதியமைச்சர் என்ற வகையில் கடமையாற்றிக் கொண்டு, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான அர்ஜூன் அலோசியஸ் பணிப்பாளராக கடமையாற்றும் வோல்ட் மற்றும் ரோ எசோசியேட்ஸ் தனியார் நிறுவனங்களின் பெயர்களில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த மொனாரிக் வீடமைப்பு தொகுதியில் அமைந்துள்ள இலக்கம் 5 PH2 என்ற வீட்டில் வசித்து வந்துள்ளதன் மூலம் இலஞ்சம் தொடர்பான சட்டத்தின் 19(ஆ) ஷரத்தின் கீழ் தவறு செய்துள்ளதாக குற்றப் பத்திரிகையில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வீட்டுக்காக இரண்டாவது சந்தேகநபரான அர்ஜூன் அலோசியஸ் பணிப்பாளராக இருக்கும் வோல்ட் மற்றும் ரோ எசோசியேட்ஸ் மற்றும் பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் ஆகிய தனியார் நிறுவனங்களின் காசோலைகள் மூலம் 11.68 மில்லியன் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமைக்காக இரண்டாவது சந்தேகநபரான அர்ஜூன் அலோசியஸூம் இலஞ்சம் தொடர்பான சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.