ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான அமைப்புக்கு சட்டவிரோத நிறுவனத்திடமிருந்து பணம்! நீதிமன்றில் அறிவிப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை
182Shares

இலங்கையின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான 'முத்து காப்பாற்றுங்கள்' என்ற அமைப்புக்கு 'கட்டார் அறக்கட்டளை' என்ற பெயரில் இயங்கும் சட்டவிரோத நிறுவனம் 13 மில்லியன் ரூபாவை அனுப்பியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு இந்த தகவல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'கட்டார் அறக்கட்டளை' என்ற அமைப்பு 'முத்துக்களைக் காப்பாற்றுங்கள்' அமைப்புக்கான கட்டட நிர்மாணிப்பு ஒன்றுக்காகவே இந்த நிதியை வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.

எனினும் பிரதிவாதியான ஹிஸ்புல்லாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி குற்றப்புலனாய்வுத் துறையினரின் குற்றச்சாடை மறுத்துள்ளார்.

கூகுளின் ஒரு தேடலின்போது 'கத்தார் அறக்கட்டளை' என்றால் என்ன என்பதில் உள்ள எந்த தெளிவற்ற தன்மையையும் நீக்கிவிடும் என்று அவர் கூறினார்.

இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனிசெப் மற்றும் பல சர்வதேச அமைப்புகளுடன் இந்த அறக்கட்டளை நெருக்கமாக செயல்படுகிறது.

'கத்தார் அறக்கட்டளை' என்பது கட்டார் மன்னர் எமிரின் முக்கிய தொண்டு நிறுவனமாகும்.

கொரோனா தொற்றின்போது கூட டோஹாவில் உள்ள இலங்கை தூதரகம் கத்தார் அறக்கட்டளையுடன் நெருக்கமாக பணியாற்றியது என்றும் அந்த ஹிஸ்புல்லாஹ்வின் சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இராஜதந்திர நிலைப்பாடு காரணமாக இந்த அமைப்பு சவுதி அரேபியாவில் பயங்கரவாத பட்டியலில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதிவாதியான ஹிஸ்புல்லாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை.

இந்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கை மாற்றியமைப்பதற்காக இந்த தகவலை மேலதிகமாக சேர்த்துள்ளனர் என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து வழக்கு விசாரணை ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.