உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Sujitha Sri in அறிக்கை

நாளையதினம் முதல் நடைபெறவுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சைகளை எழுத மாணவர்களை எவ்வித தயக்கமும் இன்றி அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரீட்சை இடம்பெறும் இடங்களை ஆய்வு செய்ய கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரிக்கு விஜயம் செய்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தை நம்பி, தங்கள் குழந்தைகளை பரீட்சைகளுக்கு அனுப்பி வைத்த அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எவ்வித பிரச்சினைகளும் இன்றி வெற்றிகரகமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பெற்றோர்கள் எங்களை தொடர்பு கொண்டு அரசாங்கதிற்கு நன்றி தெரிவித்தனர். அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்த பரீட்சையை, ஒத்திவைக்க வேண்டாம் என்று பெற்றோர் அரசை வலியுறுத்தினர்.

இந்த சவாலை சமாளிக்க சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து, கல்வி மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் அரசாங்கம் அச்சவாலை வெற்றி கொள்ள முடிந்துள்ளது.

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் நாளை (12) முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே எந்த தயக்கமும் இல்லாமல் மாணவர்களை பரீட்சைகளுக்கு அனுப்புங்கள் என கோரியுள்ளார்.