வடமாகாண அரச சாரதிகள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Thileepan Thileepan in அறிக்கை

சுகாதார திணைக்கள சாரதிகள் சேவையை மூடிய சேவையாக்காது நிறுத்தப்பட்ட சாரதிகள் இடமாற்றத்தினை உடன் வழங்குமாறு வடமாகாண அரச சாரதிகள் சங்கம் கோரியுள்ளது.

வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும்,

இணைந்த சேவைகள் வகுதிக்குட்பட்ட சாரதிகளின் வருடாந்த இடமாற்றமானது கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக இடைநிறுத்தப்பட்டதனை தெரியப்படுத்தியும், அதற்கான காரணங்களைத் தெளிவுப்படுத்தியும் தங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.

26.02.2020 அன்று தற்போதைய நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களுக்கு ஏற்ப குறித்த இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு பொது நிர்வாக உள்நாட்டுலலுவல்கள் அமைச்சிற்கு முகவரியிட்டு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன் பிரதி எமது சங்கத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தங்களின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநர் அனுமதியோடு கடந்த 16.09.2020 அன்று இடமாற்றங்கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

ஆயினும் கொவிட் - 19ஐ காரணம் காட்டி குறித்த இடமாற்றம் 30.11.2020 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக பிரதி பிரதம (நிர்வாகம்) செயலாளரினால் அறியத்தரப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது எமக்கு பலத்த மனவேதனையையும், ஏமாற்றத்தனையும் தந்துள்ளது. சுகாதார திணைக்கள அதிகாரிகள் சிலர் இடமாற்றக் கட்டளைக்கு உடன்பட மறுப்பதனால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.

குறித்த சில சுகாதார திணைக்கள சாரதிகள் தாங்கள் மடடுமே நோயாளர் காவு வண்டியை செலுத்த முடியும் என்றும், தாங்கள் மட்டுமே சுகாதார திணைக்களத்தில் பணியாற்ற தகுதியானவர்கள் என்றும், தாங்கள் சிலர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டால் சுகாதார சேவையே முடங்கி விடும் என்றும் தவறான கருத்தினை மக்கள் பிரதிநிதிகளிடம் முன்வைத்து இடமாற்றத்தினை பல தடவை நிறுத்தி வந்துள்ளார்கள்.

இந்தநிலையில் சுகாதார திணைக்கள சாரதிகள் சிலர் அதீத சுயநலத்தோடும், மனிதாபிமானமற்ற முறையிலும் தற்போதைய கொவிட் - 19 நிலையிலும் தொடர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டவேளை ஏனைய திணைக்கள சாரதிகளாகிய நாங்கள் நோயாளர் காவு வண்டிகளை திறம்பட இயக்கி தடங்கலற்ற சுகாதார சேவைக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றியிருந்தோம்.

இவ்வாறு இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதற்கு கொவிட் - 19 காரணமாக கூறப்பட்ட போதும், மாறாக சுகாதார திணைக்கள சாரதி சேவையை மூடிய சேவையாக்குவதற்குரிய அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் வழங்குவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக எம்மால் அறிய முடிகிறது.

01.06.2017 மற்றும் 25.09.2017 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற பிரதம செயலாளர்களின் மாநாட்டிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 2017ஆம் ஆண்டு ஹபரணையில் இடம்பெற்ற முதலமைச்சர் மாநாட்டிலும், இந்த ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆளுநர்கள் மாநாட்டிலும் சுகாதார சேவைகள் திணைக்கள சாரதிகள் வேவையை மூடிய சேவையாக்குவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டது.

சுகாதார திணைக்கள சாரதிகள் சேவையை மூடிய சேவையாக்குவதன் மூலம், வேறு திணைக்களங்களில் இருந்து சுகாதார திணைக்களத்தில் கடமையாற்ற விரும்பும் சாரதிகளின் உரிமை மறுக்கபடல், இடமாற்றமின்றி மூடிய சேவைக்குள் தொடர்ந்தும் பணியாற்றுவதால் அச் சேவையில் உள்ளவர்கள் இலகுவாக ஊழல்கள் செய்ய வழி ஏற்படும், மனம்கவர் சேவை நிலையமாகிய சுகாதார திணைக்களத்திற்கு இடமாற்றம் மறுக்கப்படுவதன் மூலம் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் பிரயாண படி குறைந்த ஏனைய அலுவலகங்களில் கடமையாற்றும் சாரதிகளின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படல், சுகாதார திணைக்கள சாரதிகளை மூடிய சேவையாக்குவதன் மூலம் குறித்த செயற்பாடு தவாறான முறையில் முன்னுதாரணப்பட்டு சலுகை கூடிய சேவைக்குள் அடங்கும் சாரதிகள் உட்பட வேறு நிலைய உத்தியோகத்தர்களாலும், தமது சேவையை மூடிய சேவையாக்குவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே ஜனாதிபதி அவர்கள், மேல் குறிப்பிட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் நிலை உருவானால் அதில் உள்ள பாதிப்புக்களைக் கவனத்தில் கொண்டு அமைச்சரவைத் தலைவர் என்ற ரீதியில் குறித்த தீர்மானம் நீர்த்துப் போவதற்கு தங்களின் பங்களிப்பினை வழங்குமாறு தயவாக கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இடமாற்றத்தினை விரைந்து நடைமுறைப்படுத்த ஆவணை செய்யுமாறும், அனைத்து சாரதிகளுக்கும் சுழற்சி முறையில் சுகாதார திணைக்களத்திற்குள் இடமாற்றம் பெற்றுச் சென்று அங்குள்ள வரப்பிரசாதங்களைப் பெறக் கூடிய வகையில் தற்போதுள்ள இணைந்த சேவைமுறை தொடர்ந்திருக்க ஆதரவு வழங்குமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கிகன்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.