வரலாறு காணாத சம்பவம் தொடர்பில் காலம் கடந்து வெளிப்படுத்தப்படும் விடயங்கள்

Report Print Sujitha Sri in அறிக்கை
798Shares

தேச துரோகத்திற்கு ஒப்பான பல குற்றங்கள் புரிந்தே 2004ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி ஈட்டியது என்பதை மறுக்க முடியுமா என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

இலங்கையின் ஜனநாயகம், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், மீளமுடியாமல் தடம் புரண்டும் அனேகர் அந்த விடயத்தில் பாராமுகம் காட்டுவது, மிக்க மனவேதனையை தருகின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் மக்களின் வாழ்வையும் இருளாக்கியதோடு 2004ஆம் ஆண்டின் பின் எதுவித முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை.

கௌரவ சா.ஜே.வே.செல்வநாயகம், கௌரவ ஜீ.ஜீ.பொண்ணம்பலம் ஆகிய மிகப்பெரிய இரு தமிழ் அரசியல் தலைவர்களால் நிறுவப்பட்ட பிரபலமான அரசியற் கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடவடிக்கைகளை திட்டமிட்டு நாசவேலை செய்து, அதனால் தனக்கு ஏற்பட்டிருக்கின்ற அபகீர்த்தியையும் புறந்தள்ளிவிட்டு, திரு. இரா.சம்பந்தன் அவர்கள், எத்தகைய மோசடி மூலம் 2004ஆம் ஆண்டு தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற்றார், என்பதை உலகறியச் செய்ய வேண்டியது, காலம் கடந்தாலும் எனது கடமையாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது குழுவினரை தவிர்த்து ஏனைய எதிர் கட்சிக் குழுவினருக்கு கஷ்டங்கள் பல கொடுத்தும், அவர்களின் வேட்பாளர்களில் சிலரை தாக்கியும், மிகப்பெருமளவில் ஏற்பாடுகள் செய்து உயர் வகுப்பு மாணவர்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்களையும் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து வாக்களித்து, வாக்குச் சீட்டுப்பெட்டிகளை நிரப்பியும், இடம்பெயர்ந்த, இறந்த அனைவருடைய வாக்குகளையும் அளித்து உண்மையான வாக்காளர்களை வாக்களிக்கவிடாது தடுத்தும், சகல வாகனங்களையும் தாமே உபயோகித்துக் கொண்டு ஏனையவர்களுக்கு அனுமதி மறுத்தும், சகல அரச அதிகாரிகளையும், வாக்களிப்பு நிலைய பொறுப்பாளர்கள் ஆகியோரையும் வற்புறுத்தி, வாக்குச்சீட்டு அட்டைக்கு, ஒன்றுக்கு மேலதிகமாக வழங்க வைத்தும், பதிவு செய்யப்படாத வாகனங்கள் உட்பட 78 மோட்டார்சைக்கிள்களையும் 06 ஜீப் வண்டிகளையும் இஷ்டம் போல் உபயோகித்துக்கொண்டும், மக்களை வாக்களிக்க விடாது, தேர்தல் தினத்தன்றும் பிரச்சார காலத்திலும் அச்சமூட்டியும், பீதியடையச் செய்தும், 552 வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய ஒவ்வொரு கட்சியை சேர்ந்த 1104 முகவர்களையும் கடமையில் ஈடுபடவிடாது தடுத்தும், தேர்தல் சம்பந்தமான பிரச்சாரங்களுக்கும் கூட்டங்களுக்கும், ஆதரவாளர்களை சந்திப்பதற்கும் தடை விதித்து, பத்திரிகை விளம்பரங்களை அனுமதிக்காமலும் சிலவற்றை தணிக்கை செய்தும், ஆனந்தசங்கரியாகிய என் மீது மிக மோசமாகவும் கீழ்தரமான முறையிலும் சித்தரித்து கிளிநொச்சி மாவட்டம் முழுவதிலும் தெருக்கூத்து நடாத்தியும், இன ஒற்றமைக்காக அவர் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுவிட்டார் எனப் பொய்பிரசுரங்கள் தயாரித்து விநியோகித்தும் வன்னி மக்களை ஏமாற்றி உள்ளனர்.

முகமாலை வாக்குச் சாவடியில் நம்ப முடியாத அளவிற்கு நிமிடத்திற்கு மூன்று வாக்குகள் வீதம் அளித்து கூடியிருந்த பல்லாயிரக்கனக்கான மக்களில் வாக்களிக்க உரிமை இல்லாதவர்களும் எவருடைய வாக்கை எவரும் போட அனுமதிக்கப்பட்டும், வாக்களிப்பு நிலையங்களுக்கு மிக அண்மையில் பல்வேறு வாகனங்களில் தங்களுடைய உறுப்பினர்கள், அனுதாபிகள் மூலம் பெருமளவில் ஆள்மாறாட்டம் செய்து வாக்களிக்க தூண்டியும் வாக்களிப்பு நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 5 தொடக்கம் 6 வாக்குகள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

சகல வேட்பாளர்களும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களைக் கொண்டு இன்னும் பல மோசடிகள் செய்தும், செய்ய அனுமதித்தும் இறுதியில் விபரம் தெரியாத முதிர்ச்சியடையாத அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகளை இணைத்து வைத்து பல துறையிலும் உதவி பெற்றுவிட்டு அந்த இயக்கத்தையே கூண்டோடு அழிக்க திருவாளர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராஜா உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பல தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து பரலோகம் அனுப்பிவிட்டு வந்து தான் பாராளுமன்ற கதிரைகளில் அமர்ந்து ஜனநாயகத்திற்கு பெரும் இழப்பை தேடித்தந்தனர்.

இங்கே கூறப்பட்டுள்ளவை எந்த வகையிலும் மிகைப்படுத்தப்படாத உண்மையாகும். இதுவரை கூறப்பட்டுள்ளவை பிரதானமாக வாக்களிப்பு சம்பந்தப்பட்டவை.

ஆனால் இது தவிர அந்த தேர்தல் காலமாகிய ஒன்றரை மாத காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் உரிமை மீறல்கள், அரச அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.

மொத்தத்தில் ஒரு நாட்டின் குறிப்பிட்ட பகுதியை, ஒரு சில தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஏவலுக்கமைய நடந்த சம்பவங்கள் தேசதுரோக குற்றச்சாட்டுக்குள் அடங்கக்கூடியவை என்பது எனது கருத்தாகும்.

வரலாறு காணாத இச் சம்பவம் நாட்டின் அடித்தளத்தையே அதிரவைத்தும், பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் வாய்ப்பையும் இழக்க வைத்தும், அவ் அணியினரும் தொண்டர்களும் கோர தாண்டவம் ஆடியமைக்கு, போதிய ஆதாரம் உண்டு. தமிழ் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் இவற்றை மக்கள் முன் கொண்டுவர தவறினால், எதிர்கால சந்ததியை பலவீனப்படுத்துவதாக அமையும் என்பதை, சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.

பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் சமயத்தை ஒப்பிடுவது பொருத்தமாகாது. அந்தவிடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேறு விதமாக அணுகியிருக்கலாம் என்பதும் எனது கருத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.