தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட வேதனைகளுக்கு இன்று வரை வழி பிறக்கவே இல்லை! ஆனந்தசங்கரி ஆதங்கம்

Report Print Gokulan Gokulan in அறிக்கை

தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வலிகளுக்கும் வேதனைகளுக்கும் இன்று வரை வழி பிறக்கவே இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் அவர்,

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நாம் காலம் காலமாக கூறி வந்தாலும் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட வலிகளுக்கும், வேதனைகளுக்கும் இன்று வரை வழி பிறக்கவே இல்லை.

இந்தத் தைத்திருநாள் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல திருப்பங்கள் நிறைந்த நாளாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முப்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'தமிழ் ஈழக்' கோரிக்கையை முன்வைத்தாலும், அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் தனது கொள்கையினை தளர்த்திக் கொண்டு, கடந்த 15 வருடங்களாக இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக போராடிக் கொண்டு வருகின்றது.

இந்தத் தைத்திருநாளில் இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுத்து எமது தமிழ் மக்களை நிம்மதியாகவும், சுபீட்சமாகவும் வாழ வழிசமைத்துக் கொடுப்போம் என்று சபதம் எடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய தலைவர்களின் கனவை நனவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.