எம்மினத்தின் வரலாறு உரிய சான்றுகளுடன் பேணப்பட்டு, எதிர்கால சந்ததியின் கைகளில் கையளிக்கப்படாதுவிடத்து, கரைந்துபோன இனங்களின் வரிசையில் பெருமைமிக்க எம்மினமும் சேர்ந்து கொள்ளும் என்பது துயரமான உண்மையே என சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழர் களறி அமைப்பு தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்து - பேர்ன் நகரில் இடம்பெற உள்ள ஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் திறப்பு விழா தொடர்பில் தமிழர் களறி அமைப்பு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் அக்கடிதத்தில்,
ஒரு இனத்திற்கு வழிகாட்டி நிற்பது அதன் வரலாறேயாகும்.
அதனால் தான் தேசத் தலைமகன் 'வரலாறு எனது வழிகாட்டி" என்றுரைத் தான். ஒரு இனத்தின் உண்மையான வரலாறு அதன் சந்ததிகளுக்கு சரிவர எடுத்துச் செல்லப்படவில்லையாயின் அந்த இனம் இருப்பிழந்து காலவோட்டத்தில் கரைந்து போய்விடும்.
எம்மினத்தின் வரலாறு உரிய சான்றுகளுடன் பேணப்பட்டு, எதிர்கால சந்ததியின் கைகளில் கையளிக்கப்படாதுவிடத்து, கரைந்து போன இனங்களின் வரிசையில் பெருமைமிக்க எம்மினமும் சேர்ந்துக் கொள்ளும் என்பது துயரமான உண்மையே!
உலகில் தமிழர் அடையாளங்கள், வரலாற்றுச் சான்றுகள் வெளிவரும் போதெல்லாம், அவற்றை அமுக்கிவிடுவதில் அல்லது அழித்துவிடுவதில் பல்வேறு தரப்புக்கள் முனைப்புக் காட்டுகின்றன.
இவற்றையும் மீறி வெளிவருபவை மிகச் சொற்ப விடயங்களே. தமிழர்களது தொன்மைமிக்க வாழ்வியலை, வீரமும் ஈகையும் நிறைந்த தமிழர் போராட்ட வரலாற்றை நாம் நன்கறிந்திருப்பதோடு மட்டுமின்றி அதனை பேணிப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியிடம் உரியவாறு ஒப்படைக்கவேண்டும்.
இது இன்றைய தலைமுறையினராகிய எமது வரலாற்றுக் கடமையாகும்.
தமிழர் களறி, சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் நகரில் ஐரோப்பாத் திடலில் முத்தமிழ் கலை நிகழ்வுகளுடன் தமிழிசை முழங்க எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10.00 மணி முதல் மிகு சிறப்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
பல நாடுகளில் இருந்து தமிழ்ச் சான்றோர்களும், பிறமொழி அறிஞர்களும், கலைஞர்களும், பல்துறைப் பெருமக்களும் இத் திறப்புவிழாவில் பங்கெடுத்து சிறப்பிக்க உள்ளனர்.
அனைத்து தமிழ் உறவுகளையும் அன்புடன் திறப்பு விழாவில் பங்கெடுக்க அழைக்கிறோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.