சுவிற்சர்லாந்து அரசின் புதிய அறிவிப்பு!

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தின் அரசு சார்பில் சுகாதார அமைச்சர் அலான் பேர்சே மற்றும் பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி அமைச்சர் கை பார்மெலின் ஆகியோர் நடுவன் அரசின் அதிகாரிகளுடன் நேற்று முன் தினம் ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பு நடைபெறுவதற்கு முதல்நாள் செவ்வாய் 21 நபர்களுக்கும், அதற்கு முதல் நாள் திங்கள் 10 நபர்பகளுக்கே கொரோனா தொற்று சுவிசில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

கொரோனா நோய்த் தொற்றுப் பேரிடர் காரணமாக தற்போது சுவிசில் 19 லட்சம் தொழிலாளர்கள் சுவிஸ் அரச மானியம் பெற்று குறுகிய நேரப்பணியில் உள்ளனர். இது சுவிற்சர்லாந்து நாட்டின் மொத்த தொழிலாளர்கள் தொகையில் 37 வீதம் ஆகும்.

28.05.2020 முதல் சமய- வழிபாட்டுத் தலங்கள் சடங்குகள், வழிபாடுகள் திறப்பு

சுகாதார அமைச்சர் அலான் பேர்சே அவர்கள் 28. 05. 2020 முதல் வழிபாட்டுத்தலங்கள் மீளவும் திறக்கப்படலாம், சமயச் சடங்குகளும், விழாக்களும் நோற்கப்படலாம் எனும் செய்தியினை தெரிவித்தார்.

இதுவரை ஆகக்கூடியது ஐவர் மட்டுமே கூடலாம் என்ற விதி அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும் என்ற விதியே இருந்து வருகின்றது.

சுவிற்சர்லாந்தின் நடுவன் அரசு சமய அமைப்புக்கள் சமய அமைப்புக்கள் வழிபாடு, சடங்குகளை விழாக்களை மீண்டும் தொடங்குவதற்கு 28. 05. 2020ற்குள் தமது இடத்திற்கு பொருத்தமான சுகாதரப் பாதுகாப்பு நடவடிக்கை திட்டத்தினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.

இதன்படி இப்பாதுகாப்பு நடவடிக்கைத் திட்டம் இதுவரை நடைமுறையில் உள்ள சுகாதரா நடவடிக்கைகளைப் பேணுவதுடன் வழிபாட்டுத் தலத்திற்கு வருகை அளிப்போர் அனைவரது தகவல்களையும் பதிவுசெய்வதுடன், நோய்த் தொற்று ஏற்படின் அதன் சங்கிலித் தொடரினை அறியக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும் என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முதல் நாள் நடுவன் அரசு சார்பில் அலான் பேர்சே அவர்கள் சமயப் பிரதிநிதிகளை நேர்கண்டு அவர்களுடன் இக்கருத்து ஆயப்பட்டிருந்தது.

அவர்கள் மிகுந்து விரைந்து வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு அனுமதியினைக் கோரியிருந்தனர். இப்போது நடுவன் அரசு அவர்கள் வேண்டுதலை ஏற்றுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் ஒழுக வேண்டிய பாதுகாப்பு நடைமுறையில் இந்நெறிகள் உள்ளடக்கப்பட வேண்டும்:

வழிபாட்டு நேரத்தில் ஒன்றுகூட அனுமதிக்கப்படும் ஆகக்கூடிய தொகை என்ற தீர்மானம் எதுவும் அறிவிக்கப்டவில்லை. ஆனால் வெறுமையான தரையில் ஒருவருக்கு நான்கு சதுர மீற்றர் அளவு எனும் வகையில் வழிபாட்டிற்கு ஒருவர் நுழையலாம்.

ஒரே நேரத்தில் ஆகக்கூடியதாக ஒன்று கூடக்கூடிய நேரம் இடத்தின் அளவைப் பொறுத்து 15 அல்லது 30 நிமிடங்கள் என அனுமதிக்கப்படலாம்.

நிகழ்வில், சடங்கில் பங்கேற்போரது தகவல்கள் தொடர்புத் தரவுகள் பதியப்பட்டு 14 நாட்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டும்.

முன்னரே அறிவிக்கப்பட்ட தளர்வுகள்

முன்னரே 08.06.2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள தளர்வுகளை நடுவன் அரசு அறிவித்திருந்தது. அதன்படி கூடாரமிட்டு பொழுதுகழிப்பது (கம்பிங்) அனுமதிக்கப்படுகின்றது, உணவங்களுக்கு ஒரு மேசைக்கு நான்கு விருந்தினர் எனும் விதி தொடரப்படும்.

மேலும் ஏனைய பாடசாலைகள், கல்வி நிலையங்கள், நாடகசபைகள், திரையரங்குகள், மிருகக்காட்சிசாலைகள், தாவரவியல் தோட்டங்கள், கூடாரமிடும் திடல்கள், நீச்சல் தடாகங்கள், மலையுந்துவண்டிகள் என்பனவும் திறக்கப்படவுள்ளன.

ஆறாம் மாதத்தின் நடுப்பகுதியில் ஜெர்மன், அவுஸ்திரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடையிலான எல்லைகளும் திறக்க திட்டமிடப்பட்டு நான்கு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. பெரும்பாலும் 15.06.2020 முதல் எல்லைகள் திறக்கப்படும்.

அவசரகாலச் சட்டம் எப்போது நீக்கப்படும்?

இப்போது சுவிஸ் அரசு நடைமுறைப்படுத்தி உள்ள அவசரகால அரச அதிகாரம் எப்போது நீக்கப்பட்டு சுவிஸ் நாடாளுமன்றம் வழமைக்குத் திரும்பும் என வினவப்பட்டபோது பதிலளித்த அலான் பேர்சே, “எப்படி விரைந்து முடியுமோ அப்படி விரைந்து வழமைக்கு திரும்ப விரும்புகின்றோம்.

ஆனால் அதற்கு தயார்ப்படுத்த காலம் எடுக்கும், சரியான காலத்தை நாம் குறிக்க முடியாது. நோய்த் தொற்றின் தீவிரமே வேகத்தை நிர்ணயிக்கின்றது” என்றார்.

தடமறி செயலி

தடமறி-செயலி (திறேசிங்-அப்) எனும் செயலியை சுவிஸ் அரசு நாடு முழுவதும் பயன்படுத்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆனி மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் சுவிஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தவுடன் இத்திட்டம் நடைமுறைக்கு வரலாம்.

இச்செயலி தனிமனித உரிமையினை - சுதந்திரத்தினைப் பாதிக்கும் என்ற அச்சம் உள்ளது. இருப்பினும் இச்செயலியின் நோக்கம் ஒவ்வொருவரும் தமது சுய தகவலுடன் நோய்தொற்றுக்கு ஆளாகி இருப்பின் பதியப்படும்.

அதுபோல் இச்செயலி இன்னொருவர் அருகில் வரும்போது அவரும் நோய்த்தொற்று ஆளாகி இருப்பின் அல்லது நோயிலிருந்து மீண்டிருப்பின் அத்தகவலை மறைசமிக்கையாக (பெயர், தனிநபர் தகவல் வெளிக்காட்டாது) குறிப்பிட்ட மீற்றரிற்குள் எத்தனை நோயாளர்கள் அல்லது நோயில் இருந்து மீண்டவர்கள் இருக்கின்றார்கள் என்று காட்டும்.

அதுபோல் நோய் இருக்கின்றதா என்ற ஆய்வினை ஒருவர் மேற்கொண்டிருப்பினும் அதுவும் பதியப்படும்.

நாடாளுமன்றத்தில் இதற்கு ஒப்புதல் கிடைக்குமா என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இச்செயலியை மக்கள் பயன்படுத்த கட்டாயப்படுத்தப் போவதில்லை.

இதனைப்பயன்படுத்துவது தன்விருப்பில் ஒவ்வொருவரும் தானாக முடிவெடுக்கலாம். இது உயிர்க் கொல்லிப் பரவலை தடுக்கும் என சுவிஸ் அரசு நம்புகின்றது.

பொருளாதாரம், வேலை இழப்பு

14.2 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் குறுகிய நேரப்பணித் திட்டத்திற்கு வேலை இழந்தோர்களுக்கான காப்புறுதி ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் வேலை இழப்புக் காப்புறுதி மறுசீரமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அப்படி நடக்காது என்று மறுக்கமுடியாது என்ற பதில் வழங்கப்பட்டது என்றார் பொருளாதார அமைச்சர்.

1000 மேற்பட்டோர் ஒன்றுகூட எப்போது தடை விலக்கப்படும்?

ஐவருக்கு மேற்பட்டு தொகை வரை அற்று பெருநிகழ்வுகள் எப்போது நடைபெறலாம் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், பெருநிகழ்வுகள் நோய்த்தொற்றுப் பெருக வழிசெய்யும்.

ஆகவே பெரும் கவனத்துடன் சுகாதர நடவடிக்கைகள் கடைப்பிடித்து பெரு நிகழ்வுகள் எப்போது செய்யலாம் என்ற அறிவித்தலை, தொற்றுநோய் பெருக்கத்தின் அளவைக் கொண்டு பொறுத்திருந்தே பதிலளிக்க வேண்டும் எனப் பகிரப்பட்டது.

தடுப்பூசி

கொரோனாப் பெருந்தொற்றிற்கு பொருத்தமான மருந்து இல்லாத நிலையில் சுவிஸ் அரசு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

இதற்கு 300 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை முதற்கட்டமாக சுவிஸ் அரசு ஒதுக்கியுள்ளது. 27.05.2020 மற்றும் 08. 06.2020 ஆகிய நாட்களில் அடுத்த அறிவிப்புக்கள் வெளிவரும். கொரோனா கட்டுக்குள் இருப்பின் மேலும் தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.

தொகுப்பு: சிவமகிழி