சுவிசில் நோய்த்தொற்றினைத் தடுக்க நடுவனரசை மிஞ்சும் மாநில அரசுகளின் அறிவித்தல்கள்!

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

சில நாட்களாக சுவிஸ் அரசு எதிர்பார்த்ததை விட நோய்த்தொற்றின் தொகை அதிகரித்து வருகின்றது.

கடந்த 19. 06. 2020 முதல்பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்த சுவிசின் நடுவனரசு அமுல்படுத்தியிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பெற்று, பொதுவாக இயல்புவாழ்வு திரும்பிக்கொண்டிருந்தது.

இருந்தபோதும் கட்டிற்குள் இருக்கும் மகுடநுண்ணுயிரியின் (கோவிட் 19) தொற்று அடுத்த அலையாக மீள மக்களிடையில் பரவும் எனும் எதிர்பார்ப்பு நோய்த்தொற்றுத் தடுப்பு நிபுணர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

இப்போது உள்ள கோடைகாலத்தைவிட இலையுதிர்காலத்தை ஆபத்தான காலமாக நிபுணர்கள் நோக்குகின்றார்கள்.

இந்நிலையில் சுவிற்சர்லாந்து நடுவனரசு அறிவித்திருக்கும் நடைமுறைகளைக் கடந்து இறுக்கமான நடவடிக்கைகளை சுவிசின் மாநில அரசுகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

அறோ, பாசல்லாண்ட், பாசல்ஸ்ரட் மற்றும் சொலத்தூர்ன் மாநிலங்கள்:

சுவிசின் இந்நான்கு வடமேற்கு மாநிலங்களும் போதிய இடைவெளி பேண முடியாத மற்றும் உரிய பாதுகாப்பு முகவுறை அணியமுடியாத சூழலில் உணவகங்கள் மற்றும் பொது விழாக்களில் ஆகக்கூடியது 100 மக்கள் மட்டுமே பங்கெடுக்கலாம் எனும் இறுக்க நடவடிக்கையினை அமுல் படுத்துகின்றன.

இந்நடவடிக்கை 10.07.20 முதல்நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பாசல் ஸ்ரட் இந் நடவடிக்கையினை இந்த ஆண்டின் நிறைவு வரை கடைப்பிடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சொலத்தூர்ன் மற்றும் பாசல் லாண்ட் மாநிலங்கள் ஆகஸ்ட் நிறைவு வரையும், அறோ மாநிலம் 16 ஆகஸ்ட் வரையும் இவ்விதியினை ஒழுக உள்ளன.

ஆகக்கூடியதாக 300 மக்கள் ஒன்றுகூடலாம் எனும் உச்சவரம்பினை உள்ளூரில் ஆகக்கூடியது 100 மக்கள் கூடலாம் என இம்மாநிலங்கள் எல்லை வரம்பு அறிவித்துள்ளன.

உணவகங்களிலும், பொது இடத்திலும் மற்றும் தனியார் நிகழ்வுகளிலும் வருகைப் பதிவினை மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்போது சமூக இடைவெளி பேணுதல் முகவுறை அணிதல் அவசியமில்லை.

விருந்தினர்களை பகுதிகாளகப் பிரிக்க போதிய இடமிருப்பின் ஒரு பகுதிக்குள் ஆகக்கூடியது நூறு விருந்தினர்கள் எனும் அடிப்படையில் பல திடல்களில் நிகழ்வுகள் நடைபெறலாம்.

இத்தாலியில் இருந்து சுவிசிற்கு நுழைவாசலாக அமைந்திருக்கும் ரிச்சீனோமாநிலம்:

இம்மாநிலம் ஆகக்கூடியது 30 மக்கள் மட்டுமே ஒன்றுகூடலாம் எனும் விதியினை அறிவித்துள்ளது. அதற்கு மேலாக மக்கள் ஒன்றுகூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

விடுதிகளில் ஆகக்கூடியது 100 மக்கள் ஒன்றுகூடலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடனவிடுதிகள் மட்டுமல்ல ஏனைய உணவகங்கள் மற்றும் நுகரிடங்களிலும் ஆகக்கூடியது 100 விருந்தினர்களே நுழையலாம்.

அனைத்து விருந்தினர்களும் தமது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தினை வருகைப்பதிவில் பதியக் கட்டளை இடப்பட்டுள்ளது.

விடுதி உரிமையாளர்கள் இத்தகவல்களை அடையாள அட்டையினைப் பெற்று சரிபார்க்கவும், தொலைபேசி இல. அழைப்பு விடுத்து எண்ணை உறுதி செய்துகொள்ளவும் ரிச்சீனோ மாநில அரசினால் கடமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விதி ரிச்சீனோ மாநிலத்தில் 19.07.20 வரை அமுலில் இருக்கும்.

யூறா

யூறா மாநிலத்தில் அங்காடிகளிலும் பாதுகாப்பு முகவுறை அணியவேண்டும்

07.07.2020 முதல் கடைகளில், அங்காடிகளில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய நுழையும்போதே சுகாதாரப்பாதுகாப்பு முகவுறைகளை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை 2 மாதங்களுக்கு யூறா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதி 12 வயது முதல் அனைவருக்கும் செல்லுபடியாகும்.

வோ

வோ மாநிலத்தில் 08.07.2020 புதன்கிழமை முதல் சுகாதராப் பாதுகாப்பு முகவுறையினை கடைகளில் அணிய அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10ற்க்கு அதிகமான மக்கள் ஓரிடத்தில் கூடுமிடத்தில் மட்டுமே இவ்விதி செல்லும்.

சூரிச் மாநிலத்தில் நடன மற்றும் மதுவிடுதிகளும்

சூரிச்மாநிலம் நடன மற்றும் மதுவிடுதிகளில் உள்நுழைவோர் அடையாள அட்டையினை காண்பிக்கவேண்டும் எனும் விதியினை அறிவித்துள்ளது.

மேலும் விருந்தினர்கள் தமது தொலைபேசி இலக்கத்தினை விடுதிப்பதிவேட்டில் பதியவும், விடுதி நடத்துனர்கள் அவ் இலக்திற்கு அழைப்பு விடுத்து உறுதிப்படுத்தவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விடுதியும் விருந்தினர் பதிவேட்டினை மேலாண்மை செய்யும் பொறுப்பாளரையும் மற்றும் மேலதிகமாக வருகைப் பதிவு தொடர்பாக அறிந்திருக்கும் 3வரையும் மாநில அரசிற்கு அறிவிக்கவும் கட்டளையினை வழங்கி உள்ளது.

சாப்கவுசன்

சாப்கவுசன் மாநிலமும் விடுதிகளில் அடையாள அட்டைச் சோதனையினை 16.08.20 வரை அறிவித்துள்ளது.

வருகைப்பதிவேட்டில் பதியப்படும் தரவினை விடுதி உரிமையாளர்கள் சரிபார்க்கவும் சாப்கவுசன் மாநிலம் பணித்துள்ளது.

லுட்சேர்ன்

கடந்த 04. 07. 20 சனிக்கிழமை முதல் லுட்சேர்ன் மாநிலத்தில் நடனவிடுதிகளில் மற்றும் மதுபானவிடுதிகள் தமது வாடிக்கையாளர்களை வருகைப் பதிவேட்டில் பதிவதுடன் ஆகக்குறைந்தது வருகைப் பட்டியலில் பதியப்படும் தொலைபேசி இலக்கங்களில் 20 வீதமானவர்களுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு இலக்கத்தினை சரிபார்த்து உறுதிப்படுத்தவேண்டும் எனும் கட்டளையினை வழங்கி உள்ளது.

இந்நடவடிக்கைகள் தாண்டியும்தொற்றின் தொகை அதிகரிக்குமானால் மேலும் பல மாநிலங்களும் இன்னும் இறுக்கமான நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையினை மேலும் இறுக்கமாக மேற்கொள்ள முன்னேற்பாடுகளை தயார்செய்துவைத்துள்ளன.

தொகுப்பு: சிவமகிழி