ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்புவதை சுவிஸ் அரசு நிறுத்தக்கோரி பேர்ன் பாராளுமன்றத்தில் மகஜர் கையளிப்பு

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
702Shares

தமிழர்களை திருப்பி அனுப்புவதை சுவிஸ் கைவிடவேண்டி பேர்ன் நகரில் அறவழி ஒன்று கூடலொன்று நடைபெற்றுள்ளதுடன் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

உறவுகளை இழந்த மனிதன் நாதன் (தலைவன்) அற்றவன் அவன் அனாதை என்று தமிழில் சொல்வர். இன்னொரு மொழியில் அகதி எனவும் சுட்டலாம். தலைவன் அற்ற இனமாகவே ஈழத்தமிழர்கள் இன்று தாய் நாட்டிலும் வெளியிலும் உணரவும் வாழவும் செய்கிறோம். சிலருக்கு இதில் மாற்றுக் கருத்தும் இருக்கலாம்.

ஈழ விடுதலைப்போரின் தொடர்ச்சியாக, உயிரைக் காத்துக்கொள்வதற்காக எந்தவித பாதுகாப்புமில்லாத மீன்பிடிப் படகுகளில், முதன்முதலில் 1983-ம் ஆண்டு முதல், அகதிகளாக இந்தியா நோக்கியும் தமிழர்கள் புலம் பெயர்ந்தனர்.

வாய்ப்புள்ளோர் தொடர்ந்து 1983 - 1987, 1989 - 1991, 1996 - 2003, 2006 - 2010-ம், 2020ம் ஆண்டுகளிலும் தமிழர்கள் அகதிகளாகத் 150 நாடுகளில் வாழ்கின்றனர். நாட்டிற்கு நாடு இதன் அனுபவங்கள் வேறுபடுகின்றன. ஆனால் அகதி எனும் சொல்லும் தமிழர் எனும் இனமும் இணைக்கின்றது.

12 ஆண்டுகள் சுவிஸ் நாட்டில் வாழ்ந்தால் முன்னர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்காலம், புதிய சட்டத்தின்படி வதிவிட அனுமதி பெறுவதற்கு இலங்கையர்கள் 10 ஆண்டுகள் உரிய அனுமதியுடன் வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அகதியாக 5 ஆண்டுகள் குற்றப்பின்னணியற்ற வாழ்வினை வாழ்ந்திருக்க வேண்டும்.

80களில் ஈழத்தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கியிருந்தனர். 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றோம். இவர்களில் சரிபாதி அளவினர் சுவிற்சர்லாந்து நாட்டின் குடியுரிமை கொண்டவர்களாகவும் ஏனைய பெரும்பகுதியினர் தங்குகை (பி.காட்) அல்லது வதிவிட (சி.காட்) கொண்டவர்களாகவும் வாழ்கின்றோம்.

ஆனால் 2009ம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் சுவிசில் தஞ்சம் கோரிய பெரும்பாலானோர் உண்மையான உயிர் உடமை அச்சத்துடன் சுவிஸ் நாட்டில் அகதி விண்ணப்பம் செய்திருந்தாலும் 2000ம் ஆண்டு முதல் அகதிகள் சட்டம் சீர்திருத்தம் செய்யப்பட்டு கடந்த ஆண்டுகளில் மிகக் கடுமையாக்கப்பட்டதன் விளைவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் சட்ட நுட்பம் பலரது அகதி விண்ணப்பத்தினை கேள்விக் குறியாக்கி இருந்த கடின வேளையில் சுவிஸ் அரசு இலங்கை அரசுடன் ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தினை 2016ம் ஆண்டு முதல் செய்திருந்தபோதும் கடந்த டிசம்பர் 2019 முதல் முனைப்புக்காட்டி வருகின்றது. இதில் என். மற்றும் எப். அனுமதியில் வாழும் 3600 தமிழர்கள் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வரை சிக்கி அகதிகளாகத் தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி சுவிற்சர்லாந்து நாடு பாதுகாப்பு அளிக்கும் என நம்பி வந்த பலரும் உரிய சட்ட நுட்பம் அறியாத காரணத்தாலும் மாற்றம் அடைந்த சுவிஸ் அரசியல் போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அகதிகள் என்றால் நேரடியாகப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு இது தமது வரலாறு என்பது நினைவிற்கு வந்தாலும், சுவிசில் பிறந்து வளரும் 2ம், 3ம் தலைமுறையினருக்கு அதன் நெருக்கம் தெரியாது என்பது இயல்பாகும்.

பாதுகாப்பாக சுவிசில் பெரும்பாலான தமிழர்கள் நாம் வாழ்ந்தாலும் இங்கும் தமிழர்கள் அகதிகளாக கடந்த சில ஆண்டுகளாக பெரும் நெருக்கடிகளில் அல்லல் படுகின்றார்கள் என்பது உண்மையாகும்.

சட்டத்தைக் எடுத்துக்காட்டி அகதி விண்ணப்பம் என். மற்றும். எப். காட்டில் வாழ்பவர்களுக்கு நிராகரிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

ஆகவே அரசியல் உரிமையின்பால் நின்று 31.08.2020 சைவ நெறிக்கூடத்தின் ஒருங்கிணைப்பில் இலங்கைக்கு தமிழர்களைத் திருப்பி அனுப்பாதீர் எனும் அறவழி ஒன்றுகூடல் பேர்ன் நகரில் பாராளுமன்றத்திற்கு எதிராக „வைசென்ஹவுஸ்“ திடலில் 14.00 மணிமுதல் நடைபெற்றது. இதில் பல்சமய இல்லத்தில் பங்காளராக விளங்கும் சைவநெறிக்கூடத்துடன் சமாதானத் தேவாலயத்தின் அருட்தந்தை திருநிறை. கிறிஸ்ரியான் வல்ரி அவர்களும் இணைந்திருந்தார்.

இறைவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கப்பெற்றது. சைவநெறிக்கூடத்தின் செந்தமிழ் அருட்சுனையர் திருநிறை. குழந்தை விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ் ஒலிக்க அதனைத் தொடர்ந்து ஒன்றுகூடலை அருட்தந்தை திரு. கிறிஸ்தியான் அவர்கள் நல்லுரை வழங்கி ஆரம்பித்தார்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக கொலம்பஸ் அவர்கள் ஈழவிடுதலைப்போராட்டம் முதல் போராட்டம் மௌனிக்கப்பட்ட காலத்திற்குப் பின்னரும் இலங்கையில் ஏன் தமிழர்கள் உரிய உரிமையுடன் நலமாக வாழ முடியாத சூழல் உள்ளது. என்பதை சிறப்புரையாக ஆற்றினார். அனைத்துப் பேச்சுக்களும் யேர்மன் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது.

முன்னையனாள் அரசியற்கைதி செல்வக்குமார் தான் நேர்கண்ட கொடிய தடுப்பின் அனுபவத்தினையும் அகதியின் வலியினையும் தனது பட்டறிவுடன் எடுத்துரைத்தார்.

ஈழத்தில் நாம் சுதந்திரமாக வாழ வழியுண்டு என்பது உண்மை என்றால் அனைத்து அரசியற்கைதிகளும் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் எனும் தனது ஆதங்கத்தினையும் சுவிஸ் அரசிற்கு பதிவு செய்தார்.

அடுத்து கிங்ஸ்லி றொசான் அவர்கள் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் சார்பில் அவர்களது வேண்டுகோளையும் இன்றை ஒன்றுகூடலின் நோக்கத்தினையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எடுத்துரைத்தார்.

31.08.2020 பிற்பகல் 15.30 மணிக்கு தமிழர்களை சுவிஸ் அரசு திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டி கையளிக்கப்படும் மனுவினை சைவநெறிக்கூடம் வாசித்தளித்தது.நிறைவுரையினை அருட்தந்தை கிறிஸ்தியான் வல்ரி ஆற்றினார்.

ஒன்றுகூடல் 14.50 மணிக்கு நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து சுவிஸ் பாராளுமன்றம் சென்று 15.30 மணிக்கு மனு சுவிஸ் அதிபருக்கும் சுவிசின் ஏழு நடுவன் அமைச்சர்களுக்கும் கையளிக்கப்பட்டது. அலெக்ஸ்சண்திரா கிறாப் நேரில் பெற்றுக்கொண்டார்.

நோய்த்தொற்றுத் தடுப்பு செயற்பாட்டினை ஒழுகியும், காவற்துறை வேண்டுகோளை ஏற்று உரிய பாதுகாப்புடன் நடைபெற்றதும் இதன்போது பாராட்டப்பட்டது.