சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து அரசு மகுடநுண்ணியிரித் தொற்றுப் பேரலை (கோவிட்-19) காலத்திற்குப் பின் இன்று மாநில அரசபிரதிநிதிகளை அழைத்திருந்தது. அனைவரும் திருப்பமான அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்படும் என எதிர்பார்த்திருக்க அப்படி அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

சுவிசின் நடுவனரசு தற்போதைய சூழலை பரிவுடனும் கவலையுடனும் நோக்குவதாக அறிவுப்பு மட்டும் செய்திருக்கின்றது, தெளிவான அறிவுறுத்தல் எதனையும் புதிதாக வழங்கவில்லை.

15. 10. 2020 வியாழக்கிழமை 2613 புதிய தொற்றுக்கள் பதிவாகி உள்ளதாக சுவிட்சர்லாந்தின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. முதல் நாள் புதன்கிழமை 2823 புதிய தொற்றுக்கள் பதிவாகி இருந்தன.

ஆற்றப்படும் சோதனைகளில் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளோர் வீதம் 10 ஆக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் செய்யப்பட்ட சோதனைகளில் இத்தனை வீதம் தொற்றுக்குள்ளானோர் தொகை வீதத்தின்அடிப்படையில் இப்படி அதிகமாக அமைந்திருக்கவில்லை.

தற்போது எதிர்மறை இயக்கவியல் நிலவுகின்றது என்றார் சுவிசின் நலவாழ்வு (சுகாதார) துறை அமைச்சர் அலான் பெர்சே. அவர் சுவிஸ் அதிபர் சொமறுக்கா அவர்களுடன் இணைந்து மாநிலங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

கூடியிருந்த ஊடகவியலாளர்கள் சுவிசின் கூட்டாச்சி முறைமை மீதும் நோய்த்தொற்றுக்கு எதிராக நடுவனரசு ஆற்றும் செயல்கள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

புதிய கட்டுப்பாடுகள் வருமா?

சுகாதார அமைச்சரின் பதில் பொத்தம் பொதுவாக அமைந்தது. வீடுகளில் இருந்து பணிசெய்ய முன்மொழிகின்றோம், பொதுப்போக்குவரத்து மற்றும் கட்டடங்களுக்குள் சுகாதார முகவுறை அணிய வேண்டுகின்றோம்.

சுகாதார திணைக்களக இயக்குனர் லுக்காஸ் எங்கெல்பெர்க்கெர் எதிர்காலத்தில் தனியார் நிகழ்வுகளில் பங்கெடுப்போர் தொகை கட்டுப்படுத்தப்படலாம் எனும் செய்தியை வெளிப்படுத்தினார். அறுதியான தீர்க்கப் பதிலை அவரும் அளிக்கவில்லை.

வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் பெர்சே அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை இயக்குனர்களைச் சந்திக்கவுள்ளார். அப்போது மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாக கலந்து ஆயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இனிவரும் நாட்களில் புதிய நோய்த்தொற்றுத் தடுப்பு செயற்பாடுகள் நடைமுறைக்கு வந்தாலும் அவை மாநில அரசினால் தத்தமது சூழலிற்கு ஏற்ப அறிவிக்கப்படும். மொத்த சுவிட்சர்லாந்து நாட்டுக்கும் பொதுவான அறிவிப்புக்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

நோய்த் தொற்றின் தொடக்க காலத்தில் இருந்தது போல் வழமைக்கு மாறான கடுமையான இறுக்கசூழல் மீண்டும் அமுலிற்குவருமா?

சுவிசை கொரோனா ஆட்கொள்ள முற்பட்டபோது இளவேனிற் காலத்தில் அமுலில் இருந்த கடுமையான சூழலை தவிர்க்கவே சுவிசின் நடுவன் அரசு முயல்கின்றது என்றார் சுவிஸ் அதிபர் சொமொறுக்கா. இதன் பொருள் இனிவரும் நடவடிக்கைகளை மாநிலங்களே தீர்மானிக்கும் என்றும் அவர் பகர்ந்தார்.

ஆகவே மாநிலங்கள் மற்றும் நடுவனரசு தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்வதும், தேவையான இடத்தில் உரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதும் மிக அவசியம் என்றார் சுவிஸ் அதிபர்.

மேலும் அவர் தெரிவிக்கையில் சுவிசின் நடுவனரசு அமைச்சர்கள் தற்போது நிலவும் சூழலை அதிக கரிசனையுடனும் கவலையுடனும் நோக்குகின்றோம்.

மாநிலங்களிடத்தில் இறுதி முடிவெடுக்கும் இறைமை அளிக்கப்பட்டாலும் நடுவனரசு தனது கடமையினை முழுமையாக ஆற்றும் என்றார்.

கூட்டாச்சி முறை நடுவனரசு விரைந்து செயற்படத்தடையாக உள்ளதா?

இக் கேள்விக்குபதிலளித்த சொமொறுக்கா நடுவனரசாகிய நாம் எப்போதும் விரைந்து முடிவெடுக்கும் தகையுடன் உள்ளோம், அதுபோல் மாநிலங்களும் உள்ளன என அரசியல் நுட்பத்துடன் பதில் அளித்தார்.

இதற்கு பதிலளித்த மாநிலங்கள் மாநாட்டின் தலைவர் கிறிஸ்ரியான் றாத்கெப் கூட்டாச்சி முறைக்கு இச் சூழல் ஒரு அழுத்த பரீட்சைதான். இருந்தபோதும் இப் பரீட்சையின் பெறுபேறுகள் எமக்குப் பயனுள்ளதாகும் என்றார்.

மேலும் தெரிவிக்கையில் கூட்டாச்சி என்பது அதன் நெகிழ்வுடனும் தொடர்புடையது, இதுவே இப்போது கூட்டாச்சியின் நடுவமாகவும் அமைந்துள்ளது என்றார்.

தற்போது மாநிலங்கள் தமது புறச்சூழலுக்கு ஏற்பமுடிவுகளை தன்னிச்சையாக எடுப்பது சிறந்த செயல் ஆகும். ஆனால் விரைந்து எடுக்கப்படும் விரைவின் வேகம் போதுமானதா என்பதை உறுதி செய்ய முடியாது உள்ளது என்றார்.

முகவுறை தொடர்பாகநிலவும்குழப்பம்தொடருமா?

சுவிட்சர்லாந்து முழுவதும் முகவுறை அணிதல் தொடர்பான பொது விதி அமைதல் நன்று என்றார் சுகாதாரத்துறை இயக்குனர் தலைவர் எங்கெல்பெர்க்கெர். ஆனாலும் மாநிலங்கள் தொடர்ந்து தமது சூழலுக்கு ஏற்பமுடிவெடுத்துக்கொள்வதும் நன்று.

கடந்த வியாழக்கிழமை சுவிசின் கிழக்கு பிராந்திய மாநிலங்கள் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஒரு பொது முடிவினை எட்டியிருந்தன.

மேலும் இம் மாநிலங்கள் 30 மக்களுக்கு மேலாகப் பங்கெடுக்கும் தனியார் விழாக்களிலும் முகவுறை அணிதலை கட்டாயமாக்கி உள்ளன.

புதிய தொற்றின் வீதம் அதிகரிப்பதற்கு பெரிய விழாக்கள்தான் காரணமா?

சுகாதார அமைச்சரின் கருத்தின்படி கடந்த நாட்களில் பெருவிழாக்கள் அளிக்கப்பட்ட அனுமதிக்கும் அதிகரிக்கும் நோய்த்தொற்றிற்கும் தொடர்பில்லை.

இவ்விழாக்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு நடைபெறுகின்றன. பெரு நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும்போதும் சூழலைக் கருத்தில் கொண்டே வழங்கப்படுகின்றது.

கடந்த நாட்களில் அதிகரித்திருக்கும் தொற்றுக்கள் பெருவிழாக்களில் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் உரிய கடுமையான காப்பமைவுகளை கடைப்பிடிக்கின்றார்கள்.

உரிய சுகாதரப் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு நடைபெறும் விழாக்களால் தொற்று இடர் இல்லை. ஆனால் சூழலிற்கு ஏற்ப இக்காப்பு அமைவுகளிலும் மாற்றங்கள் செய்யப்படும்.

புதிய தொற்றுக்கள் அதிகரிக்க காரணி என்ன?

சுகாதார அமைச்சர் பெர்சே இது புதிராக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த நாட்களில் நாம் குளிர் காலத்தில் தொற்றின் தொகை அதிகரிக்கும் என்று சொல்லி வந்துள்ளோம். ஆனால் இப்போது நிலவும் சூழலை நாம் உண்மையில் ஆண்டின் நிறைவில் எதிர்பார்த்திருந்தோம்.

விஞ்ஞானிகள் கருத்தின்படி மக்கள் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கடைப்பிடிக்காததும், அக்கறையற்ற போக்கும் காரணமாக இருக்கலாம் என ஊகிக்கின்றனர். பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம் ஆகியன இப்போது முழுமையாக இயங்குகின்றன.

பெரும்பாலான மனிதர்கள் கட்டடங்களுக்குள் பிற மனிதர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் மீள அதிகரித்தமையால் இதுவும் தொற்று அதிகரிக்க காரணமாக அமைந்திருக்கலாம் என நோக்கப்படுகின்றது.

நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்த ஏதுசெய்ய வேண்டும்?

நடுவனரசும் மாநில அரச பிரதிநிதிகளும் நீண்ட காலமாக அறிவித்துவரும் நலவாழ்வு நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். இடைவெளி பேணுங்கள், கைகளை நன்றாகக் கழுவுங்கள், உரிய இடைவெளி பேணமுடியாத இடங்களில் முகவுறை அணியுங்கள்.

அதுபோல் தடமறி செயலியைப் பயன்படுத்துங்கள். இவையே இப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகும்.

மாநிலங்களின் சுகாதாரத்துறை இயக்குனர்கள் தலைவர் எங்கெல்பெர்க்கெர் தெரிவிக்கையில்,

எம்மைப் பொறுத்தவரை நாம் தொடர்ந்தும் விளையாட, உணவகங்கள் செல்ல, பனிக்கால விடுமுறை செல்ல விரும்புகின்றோம். ஆகவே உடனடியாக மக்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து நோய்த் தொற்றினை கட்டுப்படுத்த பங்களிக்க வேண்டும் என்றார்.

கோவிட் 19 என்பது அடுத்த அலையல்ல, இது ஓயாத அலையாக அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் இருக்கப்போவதாகவே கணிக்கப்படுகின்றது.

ஆகவே தேவையற்ற அச்சத்திற்க்கு ஆளாகாது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடாது மகுடநுண்ணுயிரியுடன் நாம் வாழப்பழகுவதே சிறந்ததேர்வாக இருக்கும்.

தொகுப்பு: சிவமகிழி