சுவிற்சர்லாந்தின் கொரோனா நிலவரம்! வெளியாகியுள்ள அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

இன்று பிற்பகல் 2 மணிமுதல் சுவிற்சர்லாந்து நாட்டின் 26 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சுக்கள் ஒன்றுகூடி மகுட நுண்ணுயிர்த் தொற்றுத் (கொரோனா) தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

சுவிசின் நடுவனரசின் துறைசார் அறிஞர்களும், மாநில அரசின் துறைசார் அறிஞர்களும் இணைந்து தற்போதை கொரோனாத் தொற்றுச்சூழல் தொடர்பாக ஆழமாக ஆய்வு செய்து கலந்துரையாடினர்.

நடுவனரசின் நோய்த்தடுப்பு சிறப்புக் குழுவின் தலைவரான மார்த்தின் அக்கெர்மான் சுவிஸ் அரசு விரைந்து சடுதியான காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இன்று தாம் வேண்டுகோள் விடுத்தார்.

முகவுறை அணிதல் நாடுமுழுவதும் ஒரே விதியாக நடைமுறைக்கு வர வழிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

16. 10. 2020 நிலவரப்படி 3105 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களின் சராசரி 1692 மக்கள் புதிதாக கொரோனா தொற்றுக்கு உட்பட்டுள்ளார்கள். 150 வீதம் தொற்று அதிகரித்துள்ளதையும் இது பதிவுசெய்துள்ளது.

சுவிஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ள கொரோனா தடமறி செயலி 14.10.2020 வரை 1,590,000 பயனாளர்களால் தரவிறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தொற்றுநோய் தடுப்பு நிபுணர் விர்ஜீனி மசெறெய் ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார். புதிய தொற்றுக்கள் அதிகரிக்கின்றன. மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்வோர் தொகையும் அதிகரித்துள்ளது.

இப்போது இந்நோய் அதிகளவு இளவயதினருக்கு தொற்றி உள்ளது. ஆனால் முதியவர்களும் புதிதாக தொற்றுக்குள்ளாகி உள்ளனர். இந்நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பல சுகாதார நடவடிக்கைகளை நாம் கைக்கொள்ள வேண்டும்.

சமூக இடை வெளி பேணப்பட வேண்டும், தீண்டுதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

இன்றைய பொது ஒன்றுகூடலின் பெறுபேறுகள் இவை ஆகும்:

மாநில சுகாதார அமைச்சுகள் சுவிற்சர்லாந்து நாடுமுழுவதும் முகவுறை அணிவது தொடர்பாக பொதுவான நடைமுறைகளை சுவிஸ் நடுவனரசு மேற்கொள்ள வேண்டும் எனும் வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சுவிற்சர்லாந்து நடுவனரசின் “கோவிட் 19 நோய்த்தடுப்பு சிறப்புப்படை” வாய்ப்புள்ள தொழிலாளர்கள் நாடுமுழுவதும் வீடுகளில் இருந்து பணிசெய்ய வேண்டுகோள் விடுத்துள்ளது.

கட்டடங்களின் உள்ளிடங்களிலும் அனைவரும் முகவுறை அணியவும் இத்துறைசார் அறிஞர்கள் முன்மொழிந்துள்ளார்கள்.

மாநிலங்களின் அரசவைத்தியர் றுடோல்ப் ஹவுறி கருத்து தெரிவிக்கையில்,

நாம் தடம் அறியும் செயலி கொண்டும், ஏனைய நுட்பம் கொண்டும் நோய்த் தொற்றுக்கு ஆளாகிய நோயாளர்களுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறியும் திறனில் எமது எல்லையை அடைந்துவிட்டோம்.

ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர் தானாக முன்வந்து தன்னை அடையாளப்படுத்தவும், தன்னுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காட்டவும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.

ஜேர்மன் நாடு சுவிசின் சில பிராந்தியங்களை அதிக தொற்றுக்குள்ளான ஆபத்தான பகுதியாக அறிவித்துள்ளது. ஆனாலும் அவர்கள் ஜேர்மன் எல்லைதாண்டிச் சென்று பொருட்கள் வாங்க தடை ஏதும் விதிக்கவில்லை.

அதில் இப்போது எந்த மாற்றமும் இல்லை எனும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்பென்செல் அவுசர்கோடென், அப்பென்செல் இன்னெர்கோடென், பாசல் ஸ்ரட், பேர்ன், பிறைபூர்க், லுட்சேர்ன், நிட்வல்டென், ஒப்வல்டென், செங்காளன், துர்க்காவ் ஆகிய மாநில அரசுகள் பொதுவிடங்களிலும் பொதுக்கட்டடங்களிலும் முகவுறை அணிதலை கட்டாயமாக்கி உள்ளது.

இன்றைய மாநிலங்களின் சுகாதரத்துறைக் கூட்டம் சுவிற்சர்லாந்து நடுவனரசினை சுவிஸ் முழுவதும் பொது வெளி இடங்களிலும் கட்டடங்களுக்குள்ளும் முகவுறை அணிதலை உடனடியாக கட்டாய சட்டமாக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீன அரசு கடந்த காலத்தில் கொரோனாவிற்கு பயன்படுத்தும் தடுப்பூசி நற்பலனை அளித்ததுள்ள ஆய்வுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், டிசம்பர் 2020க்குள் பயனுள்ள தடுப்பூசி வரும் என எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

18. 10. 2020 ஞாயிறு அன்று சுவிற்சர்லாந்தின் நடுவனரசு அவசர ஒன்றுகூடல் நடாத்தவுள்ளது. அன்று புதிய முடிவுகளை சுவிஸ் அரசு அறிவிக்குமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தொகுப்பு: சிவமகிழி