நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா! வீதித் தடை அமுல்

Report Print Manju in போக்குவரத்து

எதிர்வரும்-08 ஆம் திகதி வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும்-07 ஆம் திகதி முதல் வீதித் தடை அமுல்படுத்தப்படவுள்ளது எனத் தெரிவித்தார் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முன்னாயத்த ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று முற்பகல் மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வீதித் தடை ஏற்படுத்தப்படவுள்ளமையால் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியிலிருந்து பருத்தித் துறை வீதியூடாகச் செல்கின்ற வாகனங்கள் ஆனைப் பந்திச் சந்தியை அடைந்து நாவலர் வீதியூடாக நல்லூர் குறுக்கு வீதியை அடைந்து, அதன் பின்னர் மீண்டும் பருத்தித் துறை வீதியை அடைந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

அதே போன்று யாழ்ப்பாணம் நோக்கி வருகின்ற வாகனங்களும் பருத்தித் துறை வீதியிலிருந்து கச்சேரி- நல்லூர் வீதியை அடைந்து, பின்னர் கச்சேரிச் சந்தியை அடைந்து பின்னர் கண்டி வீதியூடாக யாழ். நகர்ப் பகுதியைச் சென்றடைவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படவுள்ள சிரமங்களுக்கு யாழ். மாநகர சபை மன்னிப்புக் கோரி நிற்கிறது.

சுவாமி வெளிவீதி வலம் வரும் போது வாகனங்கள் உள்வர அனுமதியில்லை. குறிப்பாக ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் கடைகளை வைத்திருப்பவர்களுக்குமான அனுமதி அட்டைகளை நேற்று முதல் வழங்க ஆரம்பித்துள்ளோம்.

அந்த வகையில் அவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை மூலம் இருப்பை உறுதி செய்து அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய அலுவலக அடையாள அட்டைகளைப் பாவித்துத் தமக்குரிய அனுமதியைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு வீதித் தடைக்கும் ஒவ்வொரு நிறத்திலான அனுமதி அட்டைகளை நாங்கள் வழங்குகிறோம்.

அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்பவர்கள் தூக்குக் காவடி முதலான நேர்த்திக் கடன்கள் செய்யும் போதும், சுவாமி வெளி வீதி வலம் வரும் போதும் வாகனங்களுடன் உள்ளே வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் விடுத்துள்ளோம்.

இரண்டு வீதித் தடைகளிலும் பரிசீலனை இடம்பெற்ற பின்னரே வீதித் தடைக்குள் உள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றார்.

Comments