முச்சக்கர வண்டிகளினால் கொழும்பை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தப்படும்

Report Print Kamel Kamel in போக்குவரத்து

முச்சக்கர வண்டிகளினால் கொழும்பு நகரை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டிப் பேரவையின் தலைவர் சுனில் ஜயவர்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

கொழும்பு நகரின் பல இடங்களில் முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

கொழும்பு மாநகரசபையும் பொலிஸாரும் இணைந்து இவ்வாறு முச்சக்கர வண்டி தரிப்பிடங்களை அகற்றி வருகின்றனர்.

இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ளாவிட்டால் அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளையும் இணைத்துக் கொண்டு பாரியளவில் தொழிற்சங்கப் போராட்டமொன்றை நடத்த நேரிடும்.

முச்சக்கர வண்டி தரிப்பிடங்களை அகற்றுவதனால் கொழும்பு நகரில் சுமார் 70000 முதல் 80000 வரையிலான முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவர்.

தரிப்பிடங்கள் இன்றி வீதியில் இந்த முச்சக்கர வண்டிகள் சுற்றித் திரிந்தால் நகரின் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும்.

முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக கார்களை அறிமுகம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது, இது உண்மையில் தரகுப் பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கிலானது.

முச்சக்கர வண்டி சாரதிகள், உரிமையாளர்கள் அவர்களது குடும்பங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை.

கொழும்பில் காணப்படும் முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் தொடர்;ச்சியாக அகற்றப்பட்டால், கொழும்பு நகரில் உள்ள அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளையும் ஒன்றிணைந்து பாரிய போராட்டமொன்றை நடத்த நேரிடும் என சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Comments