விபத்தை தடுப்பாரும் இல்லை, தட்டிக்கேட்பாரும் இல்லை!

Report Print Samy in போக்குவரத்து
64Shares

காலைப்பொழுதில் பத்திரிகைகளை எடுத்தால் விபத்து மரணம் என்ற செய்திக்குப் பஞ்சமே இல்லை எனலாம்.

ஒவ்வொரு நாளும் விபத்து மரணம் நடந்த வண்ணமுள்ளன.யுத்த காலத்தில் நடந்த மரணங்கள் போல விபத்து மரணங்கள் இடம்பெறுவதைக் காண முடிகின்றது.

வீதியில் இறங்கியவர் வீடு வந்து சேர்ந்தால் உண்டு என்றளவிலேயே தற்போதைய நிலைமை இருப்பதைக் காண முடியும்.மனித உயிர்களுக்குப் பெறுமதி இல்லை என்றாயிற்று.

அந்தளவுக்கு மரணம் மலிந்து போயுள்ளது.பெற்று வளர்த்த பிள்ளை தங்களைப் பார்ப்பான் என்றிருக்க, விபத்தில் பிள்ளைகளைப் பறி கொடுத்தால் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நினைத்தாலே இதயம் கருகிப் போகும்.

அந்தளவுக்கு விபத்து மரணங்கள் கொடுமையானவை.அண்மையில் வேலணை - அராலிச் சந்தியில் நடந்த விபத்தொன்றில் புதுமணத் தம்பதிகள் விபத்துக்குள்ளாகினர்.

இதில் மணமகன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். தாய் தந்தையருக்கு ஒரே பிள்ளையான அவரின் இழப்பால் பெற்றோர்கள் தாங்கொணாத் துயர் அடைந்தனர்.

ஒரே பிள்ளையின் மரணம் அவர்களை வாட்ட ஒரு நாள் தந்தையார் தூக்கிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் செய்தியாக - தகவலாக வெளிவராமல் இருந்திருக்கலாம். ஆனால் விபத்தில் இறந்த மகனின் துயரைத் தாங்க முடியாத வயோதிபத் தந்தை தன்னுயிரை மாய்த்து விடுகிறார் எனும் போது,நடந்த விபத்து எந்தளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் உணர முடியும்.

இதுபோலவே ஒவ்வொரு விபத்து மரணங்களும் பெற்றோர்கள், பிள்ளைகள், கணவன், மனைவி எனப் பல தரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.விபத்தில் தாயை இழந்த பிள்ளைகளின் வாழ்வு பற்றி ஒரு கணம் சிந்தித்தால் வாகனம் செலுத்துவோர் தங்களின் தவறுகளை உணர்வர் என்பது நம் தாழ்மையான கருத்து.

விபத்தில் ஏற்படும் மரணம் என்பதற்கு அப்பால், படுகாயமடைந்து என்பு முறிந்து ஆறு மாதம்; ஒரு வருடமென படுக்கையில் இருப்பதும் நிரந்தர அங்கவீனத்துக்கு ஆளாகுவதும் என எல்லாமும் குடும்ப சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

ஆகவே விபத்து மரணங்களைத் தடுப்பது - தட்டிக் கேட்பது என்ற விடயத்தில் சமூக ஒத்துழைப்பு அவசியமாகிறது.எனினும் இன்றுவரை விபத்து மரணங்கள் பற்றிக் கதைப்பதோடு, அந்நேரத்தில் மட்டும் கவலைப்படுவதோடு சமூகத்தின் பணி நின்று விடுகிறது.

இந்நிலைமை தொடருமாயின் விபத்து மரணங்கள் மிகவேகமாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளது.வாகனங்களின் அதிகரிப்பு; இளைஞர்களிடம் இருக்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களின் பெருக்கம் என எல்லாமும் சேர்ந்து சந்திக்குச் சந்தி, வீதிக்கு வீதி விபத்தாக மாறி வருவதால்,விபத்தை தடுப்பதில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இதில் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவில் தொண்டர் சேவையை ஆரம்பிப்பது ஆரோக்கியமான விடயமாக இருக்கும் என்பதால் இது பற்றிச் சிந்திப்பது நன்மை பயக்கும்.

- Valampuri

Comments