மன்னார் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

Report Print Gokulan Gokulan in போக்குவரத்து

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உடனடியாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உரியமுறையில் புனரமைக்கப்படும் என வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகரசபைக்குட்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களில் ஒரு பகுதியினருக்கும், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனிற்கும் இடையில் நேற்று(09) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை, மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும், நீண்ட காலமாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் இல்லாமையால் தாங்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன்,

முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொடர்பாக ஐந்து மாவட்டங்களிலும் இருக்கின்ற பிரச்சினைகள் நீக்கப்பட்டு, முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உரிய முறையில் உருவாக்கப்பட்டு, அவை போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் பதிவுசெய்யப்படவேண்டும் என்ற சட்ட ஒழுங்குவிதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இச் சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொடர்பாக பிரச்சினைகள் நிலவிவருகின்றது.

எனவே மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உடனடியாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உரியமுறையில் புனரமைக்கப்படும்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 15.05.2017 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொடர்பான புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறவுள்ளது.

இவை தொடர்பான பல கலந்துரையாடல்கள் மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து உரிமையாளர்களையும் அழைத்து தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பாக அனைத்து ஆவணங்களும், தகவல்களும் அமைச்சர் அலுவலகத்தினால் கடந்தகாலங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தரிப்பிடத்திற்கும் தலா இரண்டு நபர்கள் அதாவது ஒரு தமிழர் மற்றும் ஒருவர் இஸ்லாமியர் என்ற வகையில் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடப்பட்ட தரிப்பிடங்களில் தற்போது சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து உரிமையாளர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

பின்னர் உரிய கோவைகள் பரிசீலனை செய்யப்பட்டு முச்சக்கரவண்டி உரிமையாளராக இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சங்கத்தின் நிர்வாகத்தில் இருக்கமுடியும். இது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு அது தொடர்பான பெயர்பட்டியல் கடந்தசில வாரங்களுக்கு முன்னர் தொடர்புபட்ட தரிப்பிடங்களுக்கு வழங்கப்பட்டன.

அது தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் அதை அமைச்சரின் அலுவலகத்தில் தெரியப்படுத்துமாறும் கோரப்பட்டிருந்தது. அதன் பின்னர் தற்போதுவரை ஒருசில முறைபாடுகள் கிடைக்கப்பெற்றன.

அவற்றினையும் விசாரணைக்குட்படுத்தி இறுதியாக முச்சக்கரவண்டி தரிப்பிடங்களுக்கு பொறுப்பானவர்களாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை வைத்து இறுதியாக தீர்மானிக்கப்பட்ட பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 15.05.2017 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு பெயர்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளவர்கள் மாத்திரமே பின்வரும் ஆவணங்களோடு கூட்டத்துக்கு சமூகமளிக்க முடியும்.

குறிப்பாக முச்சக்கரவண்டி உரிமைப்பத்திரம், முச்சக்கரவண்டி பதிவுப்புத்தகம், தேசிய அடையாள அட்டை அல்லது முச்சக்கரவண்டி உரிமையை உறுதிப்படுத்தகூடிய வேறு ஏதும் ஆவணங்கள் மற்றும் அவர்களின் சேவையை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களோடு சமூகமளிக்கவும்.

மேலும் எமது மக்கள் குறிப்பாக பல பெண்கள், சிறுமிகள் பாலியல் சேட்டைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள் ஆகவே இந்த முச்சக்கரவண்டி உரிமையாளர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபடாது எமது மக்களுக்கு ஒரு சிறந்த சேவையினை வழங்கவேண்டும் என இதன் போது அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆகவே 15ம் திகதி அறிவுறுத்தல் வழங்கப்பட்ட உரிமையாளர்கள் அனைவரும் தவறாது சமூகம் தந்து ஒரு வினைத்திறன்மிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினை உருவாக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இச் சந்தர்பத்தில் அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை இந்த சேவையில் ஈடுபடுகின்ற அனைவரும் ஒற்றுமையாகவும், தங்களுக்குள் எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி மக்களுக்கு ஒரு தரமான சேவையினை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் நல்லமுறையில் சங்கங்களை புனரமைத்து மக்களுக்கு போக்குவரத்து சேவையினை வழங்குமாறும் அறிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments