வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச சேவைகள் இடம்பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தல் வழங்கியுள்ள நிலையில் இதற்கு தடையாக அரசியல்வாதிகள் எவராவது தடையாக இருப்பார்களேயானால் உணவு தவிர்ப்பில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். ரி. இராஜேஸ்வரனிடம் கேட்டபோது,
புதிய பேருந்து நிலையம் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தியை மையமாக கொண்டு அமைக்கப்பட்டதுடன் இரு பேருந்து சேவையினரும் இணைந்து செயற்படவே உருவாக்கப்பட்டது.
மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இப் பேருந்து நிலையத்தினை இன்று உதாசீனப்படுத்தி எமது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு முன்னிடம் கொடுக்க முடியாது. பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளபோது பலரும் விமர்சனம் செய்தனர்.
தற்போது முதலமைச்சரும் வட மாகாண போக்குவரத்து அமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன் முன்னின்று இப்பேருந்து நிலையத்தினை திறக்கவேண்டும் என கூட்டத்தினை கூட்டி தீர்மானம் எடுத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடும் தற்போதைய பேருந்து நிலையத்தினை சூழவுள்ள ஒரு சில வர்த்தகர்களும் வவுனியா வர்த்தக சங்க தலைவர் உட்பட்ட சிலரும் இன்று புதிய பேருந்து நிலையத்தினை மீள் இயங்குவதற்கு தடையாகவுள்ளதாக அறிகின்றேன்.
இது ஓர் அரசியல் பின்னணியில் இயக்கப்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது. முதலமைச்சர் எடுத்த திடமான தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது சேவைகள் எவர் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே செயற்படும்.
எனவே இலங்கை போக்குவரத்து சபையினையும் இணைந்த நேர அட்டவனையின் பிரகாரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையை மேற்கொள்ள வவுனியா அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.
அதனைவிடுத்து பிரதேசத்தின் அபிவிருத்தியை பயனற்றதாக்க முற்பட்டு வவுனியாவிற்கு மேலும் வரவுள்ள அபிவிருத்திகளையும் ஒதுக்கப்படும் நிதிகளையும் தடை செய்யும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது என்பதனை வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.
இதனையும் மீறி புதிய பேருந்து நிலையத்தினை திறப்பதற்கு அரசியல்வாதிகள் எவராவது தடையாக இருப்பார்களேயானால் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் சாகும் வரையான உணவு தவிர்ப்பில் ஈடுபட தயாராகவே உள்ளோம் என தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கத்தின தலைவர் வாமதேவனிடம் கேட்டபோது, எமக்கு எந்தவிதமான அறிவித்தல்களும் இதுவரை தலைமைப்பீடத்தால் வழங்கப்படவில்லை. எனவே நாம் தற்போது செயற்படும் பேருந்து நிலையத்தில் இருந்தே சேவையில் ஈடுபடுவோம்.
எமக்கான அறிவித்தல் வராதவரை நாம் எந்த தீர்மானத்தினையும் எடுக்கமுடியாது. முதலமைச்சருடனான சந்திப்பில் நாம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாது என்பதனை தெளிவாக கூறியிருந்தோம். அன்றைய கூட்டம் எந்த முடிவும் இல்லாமல் நிறைவடைந்திருந்தது என்றார்.