வவுனியாவில் பொலிஸார் தாக்குதல்! கடும் போராட்டத்துக்கு மத்தியில் பேருந்து சேவைகள்

Report Print Theesan in போக்குவரத்து

வவுனியாவில் வெளி மாவட்டத்தினைச் சேர்ந்த இ.போ.ச பேருந்துகள் நேற்று மாலை புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றபோது இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சமயத்தில், இ.போ.ச பேருந்து சாரதி ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து குறித்த இ.போ.ச சாரதியான ஏ.எம்.இர்ஸாட் (வயது 30) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து தமது ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்து புதிய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொண்ட அனைத்து இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளும் வவுனியா சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை ஊழியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து, வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ஜெயராஜா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ஜெயலோரன்ஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து தலைமையக உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர், வவுனியா இ.போ.ச ஊழியர்களுக்கிடையே நேற்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரு தரப்பினரும் சேவையாற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இன்று காலை 9.00 மணி தொடக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இ.போ.சபையினரும் தனியார் போக்குவரத்து பிரிவினரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய பேருந்து நிலையத்தில் உள்ளூர் சேவைகள், வெளியூர் சேவைகள் என இரு கட்டடங்கள் உள்ளன. அவற்றில் வெளியூர் சேவைகள் கட்டடத்திலிருந்து இ.போ.ச பேருந்துகளும் உள்ளூர் சேவைகள் கட்டடத்திலிருந்து தனியார் சேவைகளும் என பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.