கொழும்பு செல்லும் அதி சொகுசு பஸ் தீக்கிரை! மட்டக்களப்பில் விசமிகள் அட்டகாசம்

Report Print Navoj in போக்குவரத்து

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் புணாணை 118ஆவது மைல் கல்லுக்கு அருகாமையில் சொகுசு பஸ் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலனறுவை - மன்னம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சாமர மதுசங்க புஸ்பகுமார என்பவருக்கு சொந்தமான சொகுசு பஸ்ஸூக்கே தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் கல்முனைக்கு சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்புக்கு செல்வதற்காக கல்முனை நோக்கி பயணித்த போதே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் நடத்துனர் எம்.றபீக் என்பவர் கருத்து தெரிவிக்கையில்,

நானும், பஸ் உரிமையாளரும், சாரதியுமான சாமர மதுசங்க புஸ்பகுமார என்பவரும் கல்முனைக்கு சென்று கொண்டிருந்த போது புணாணை பிரதேசத்தில் வைத்து பஸ்ஸூக்கு ஒருவர் கல்லால் எறிந்தார்.

இதனை அவதானித்த சாரதி பஸ்ஸை வீதியோரமாக நிறுத்திய போது பஸ்ஸூக்கு அருகில் வந்த நால்வர் என்னை தாக்கி விட்டு பஸ்ஸூக்கு பெற்றோல் ஊற்றி தீயிட்டு விட்டு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்று விட்டனர்” என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பஸ் உரிமையாளரும் சாரதியுமான சாமர மதுசங்க புஸ்பகுமார மற்றும் பஸ் நடத்துனரான எம்.றபீக் ஆகியோரை வாழைச்சேனை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.