எரி பொருட்களின் விலை அதிகரிப்பின் எதிரொலி, பஸ் கட்டணங்களில் மாற்றம்!

Report Print Rakesh in போக்குவரத்து

எரிபொருட்களின் விலை நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் மற்றும் ஓட்டோக்களுக்கான கட்டணங்களும் உடனடியாக அதிகரிக்கப்படவேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கமும், ஓட்டோ உரிமையாளர் சங்கமும் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.

தற்போதுள்ள கட்டணத்தில் 10 வீதம் அதிகரிக்கப்படவேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுன விஜேரத்ன அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்கான தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஓட்டோ உரிமையாளர் சங்கம் 20 வீதமாகக் கட்டணத்தை உயர்த்தத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 50 ரூபாவில் இருக்கும் ஆரம்ப கட்டணம் 60 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது போக்குவரத்து முதல் பல்வேறு துறைகளில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள், மரக்கறி வகைகள் மற்றும் உணவுப்பொருட்களின் விலையையும் அதிகரிப்பதற்கான நகர்வுகள் இடம்பெற்றுள்ளன.

உணவு, மரக்கறி உற்பத்திகளை இடமாற்றுவதில் போக்குவரத்து முக்கிய தாக்கம் செலுத்துவதால் அடுத்த வாரமளவில் ஹோட்டல் உணவு வகைகள் மற்றும் மரக்கறி வகைகளின் விலையில் ஏற்றம் ஏற்படும் எனவும் துறைசார்ந்தவர்களிடமிருந்து அறியமுடிகின்றது.

மக்களின் வாழ்க்கைச் செலவிலும் எரிபொருட்களின் விலை தாக்கம் செலுத்துவதால் 10 15 வீதம் வரையில் வாழ்க்கைச் செலவும் எதிர்வரும் காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்களின் விலை நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 117 ரூபாவாக இருந்த ஹொக்ரென் 92 ரக பெற்றோல் 137 ரூபாவாகவும், 128 ரூபாவாக இருந்த ஹொக்ரென் 95 ரக பெற்றோல் 148 ரூபாவாகவும் விற்கப்படுகின்றது. 20 ரூபாவால் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, 95 ரூபாவாக இருந்த டீசல் 14 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 109 ரூபாவுக்கும், 110 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 119 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

44 ரூபாவுக்கு விற்கப்பட்டுவந்த மண்ணெண்ணெயின் விலை 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், சமுர்த்தி பயனாளிகளும், மீனவர்களும் மண்ணெண்ணெயை பழைய விலையான 44 ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.