பயணிகளை சிரமத்துக்குள்ளாக்கிய இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்

Report Print Thileepan Thileepan in போக்குவரத்து

வவுனியா புதிய பேருந்து நிலைத்தில் இருந்து உள்ளுர் சேவைகளில் இலங்கை போக்கவரத்து சேவை பேருந்துகள் சேவையில் ஈடுபடாமையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

புதன்கிழமை நாளான இன்று அரச அலுவலகங்களில் மக்கள் சேவைக்காக வரும் நிலை காணப்பட்ட போதிலும் அரச அலுவலர்கள் பலர் வவுனியாவில் இருந்து தூர இடங்களில் உள்ள அரச அலுவலகங்களுக்கு செல்வதில் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டதுடன் பாடசாலை மாணவர்கள், வங்கி உத்தியோகத்தர்களும் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் மரணமடைந்துள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக ஊழியர்கள் செல்லவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றமையினாலேயே இந்நிலை ஏற்பட்டதாக போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் தெரிவித்த போதிலும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இதேவேளை பருவகால சீட்டை பெற்றுள்ள அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் இது தொடர்பாக பெரும் விசனம் கொண்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த நேரத்தில் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுவதற்கான நேர அட்டவணை இல்லாமையினால் போக்குவரத்துசபை பேருந்துகளிலேயே செல்ல வேண்டிய நிலை வவுனியாவில் காணப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் பயணிகளின் நலன்கருதி இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபடாமை தொடர்பாக பயணிகள் பலரும் விசனத்துடன் பேருந்து நிலையத்தில் காணப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு பயணிகள் தெரிவித்ததையடுத்து ஊடகவியலாளாகள் அங்கு சென்றடைந்ததும் 7.41 மணியளவில் இ.போ.ச நேரக்காப்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டு பூவரசன்குளம் மற்றும் செட்டிகுளம் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.