வாகன விபத்தில் இளம் தாய் மகள் பலி

Report Print Steephen Steephen in போக்குவரத்து

குருணாகல் - கண்டி பிரதான வீதியின் நுகவெல டிப்போவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவரும் அவரது சிறிய மகளும் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணின் கணவன் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை 7.50 அளவில் நடந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் நுகவெல தித்தபஜ்ஜல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

அம்பன்பொல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 24 வயதான சாந்தனி குமாரி என்ற இளம் தாயும் 2 வயதான மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

கணவன், மனைவி ஆகியோர் தமது பிள்ளையுடன் குருணாகல் பிரதேசத்தில் இருந்து கட்டுகஸ்தோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதன் பின்னர் கட்டுகஸ்தோட்டையில் இருந்து குருணாகல் நோக்கி சென்ற பஸ் வண்டியின் பின்னால் உள்ள சக்கரங்கள் விபத்துக்குள்ளானவர்கள் மீது ஏறிச் சென்றுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

பஸ் வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் குறித்து கட்டுஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.