ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் அதிகரிக்கும் வாகன அபராதம்

Report Print Sujitha Sri in போக்குவரத்து

33 போக்குவரத்து குற்றங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராத பணம் எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

வாகன விபத்துக்களை குறைத்து கொள்வதற்காக, அதிக வேகமாக வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் 25,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சருக்கு உள்ள அதிகாரத்திற்கமைய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதம் அதிகாரிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுவரை 23 குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தற்போது 33 குற்றங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அபராத பணமும் 30 - 50 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதற்கான அபராத பணத்தை 3000 ரூபாய் வரையிலும், பொலிஸ் அதிகாரிகளின் உத்தரவுகளை செவிமடுக்காமைக்கான அபராதம் 2000 ரூபாய் வரையிலும் அதிகரிப்பதற்கு குறித்த வர்த்தமாணியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 489 பொலிஸ் இடங்களில் இதுவரையில் புதிய அபராதங்களுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்ட அபராத பத்திரங்கள் பகிரப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.