கொழும்பு நோக்கி வந்த ரயில் விபத்து!

Report Print Thirumal Thirumal in போக்குவரத்து

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் இன்று மாலை ஹட்டன் மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக, மலையகத்திற்கான புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த புகையிரதத்தின் பெட்டி தண்டவாளங்களை விட்டு வெளியே பாய்ந்துள்ள நிலையில், மலையக பகுதிகளுக்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மற்றுமொரு புகையிரதம் ஹட்டன் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இ.போ.ச பேருந்துகளில் கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தற்போது புகையிரத திணைக்கள அதிகாரிகளினால் புகையிரத பெட்டியை தண்டவாளங்களில் நிறுத்தி புகையிரத வீதியினை சீர்செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புகையிரத தடையினை நிவர்த்தி செய்வதற்காக நாவலப்பிட்டியிலிருந்து பாரதூக்கி புகையிரதம் வரவழைக்கப்பட்டு நிலமை வழமைக்கு கொண்டு வரப்படும் எனவும், அதன்பின் இரவு நேர மலையக புகையிரத சேவைகளுக்கான தடை நீங்கும் எனவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.