மட்டக்களப்பில் இ.போ.சபை சாரதிகள் பணிப் பகிஸ்கரிப்பு

Report Print Kumar in போக்குவரத்து

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலைய இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைபெய்து வரும் நிலையில் இலங்கை போக்குவரத்துசபை சாரதிகள் தமது சம்பள அதிகரிப்பினை கோரி நேற்று மாலை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமையினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே நேரம் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சாலைக்கு முன்பாக இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்வு காணப்பட்டதுடன் அந்த சம்பள அதிகரிப்பு இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனவும் சாரதிகள் தெரிவித்திருந்தனர்.

தமக்கான சம்பள உயர்வினை உடனடியாக வழங்காது விட்டால் தொடர்ச்சியான பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொள்ளப்போவதாகவும் அவர்கள் இதன் போது தெரிவித்திருந்தனர்.

சம்பள அதிகரிப்பினை உடனடியாக வழங்கு, ஏமாற்றாதே, ஏமாற்றாதே இ.போ.சபை ஊழியர்களை ஏமாற்றாதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஊழியர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பணிபகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக இன்று காலை பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வாழைச்சேனை போக்குவரத்து சாலை ஊழியர்கள் சாலை முன்பாகவும் கொட்டும் மழையில் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது எங்களது அடிப்படைச் சம்பளத்தை சமப்படுத்து, அதிகரித்த சம்பளத்தை உடன்வழங்கு, இலங்கை போக்குவரத்து சாலை வாழைச்சேனை ஊழியர்களின் சேவை இடை நிறுத்தம்போன்ற வாசகங்களுடன் போராட்டத்தை நடத்தினர்.

Latest Offers