போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் மாணவர்கள்

Report Print Yathu in போக்குவரத்து

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, அம்பாள்புரம் கிராமத்திற்கான போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் மாணவர்கள், பொதுமக்கள் கிராமத்திலிருந்து தினமும் பல கிலோமீற்றர் கால் நடையாக சென்று வர வேண்டியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்திலிருந்து தினமும் 85 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கிராமத்தில் வாழும் பொதுமக்கள் காலையில் 12 கிலோமீற்றர் தூரம் கால்நடையாக பாடசாலைக்கும், பாடசாலை முடிந்து பிற்பகல் 12 கிலோ மீற்றர் கால் நடையாக வீட்டிற்கும் திரும்பிச் செல்லும் நிலை காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி கிராமத்தில் வாழும் மக்கள் அன்றாடம் கூலிவேலை செய்யும் குடும்பங்களாகவே உள்ளனர் , சில குடும்பங்கள் வவுனிக்குளத்தில் நன்னீர் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டும் வருகின்றனர்.

இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் எல்லோரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நிலைமை தொடர்பாக கடந்த பெப்ரவரி மாதம் பத்திரிக்கையில் செய்தி வெளிவந்ததையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு அமைவாக தினமும் காலை 6.30 மணிக்கு அம்பாள் புரத்தில் இருந்து வன்னி விளாங்குளத்திற்கும், மாங்குளத்திற்கும் பிற்பகல் 1.30 மணியளவில் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தவிர வேறு எந்த போக்குவரத்துச் சேவைகளும் இல்லாத நிலையில், இடை நேரங்களில் மாணவர்கள், பொதுமக்கள் கிராமத்திலிருந்து தினமும் 24 கிலோமீற்றர் கால் நடையாக சென்று வர வேண்டியுள்ளதாகவும், எனவே தமக்கு போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers