முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள்!

Report Print Kumar in போக்குவரத்து

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களைப்பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 11ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முச்சக்கர வண்டிகளை தரிப்பதற்கான தரிப்பிடங்களை அடையாளப்படுத்துவதற்கான விசேட கூட்டம் இன்று பகல் மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் என்.சசிநந்தன், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் நிலையங்களில் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரிகள், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளும் வகையில் இந்த முச்சக்கர வண்டிகள் தரிப்பிடங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகர கட்டளை சட்டத்தின் அடிப்படையில் மாநகரசபைக்குள் தரிப்பிடங்களை கொண்டிருப்பவர்களில் இலங்கை போக்குவரத்து சபை தவிர்ந்த ஏனையவர்கள் மாநகரசபையில் தங்களை பதிவுசெய்திருக்கவேண்டும். அவ்வாறான அனுமதிகளைப்பெறான நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் முச்சக்கர வண்டிகள் செயற்படுவது அவதானிக்கப்பட்டு அவற்றினை சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தற்போது மேற்கொண்டுவருகின்றோம்.

முச்சக்கர வண்டிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி இன்றாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று தினஙகள் தொடர்ச்சியாக விடுமுறையாக இருந்ததன் காரணமாக இதுவரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளாதா சாரதிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் 11ஆம் திகதி வரையில் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது எனவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

இதுவரையில் 400க்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் விண்ணப்பங்களைபெற்றுள்ளதாகவும் மீதமானவர்களும் பெற்றுக்கொள்ளுமாறும் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் 15ஆம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தப்பட்டு மாநகரசபைக்கு வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

15ஆம் திகதிக்கு பின்னர் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்த மாநகர ஆணையாளர் பதிவுசெய்யப்படாத முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக மாநகரசபை சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் 70 முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.