யாழ். பலாலியை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்தும் இந்தியாவிற்கு விமான சேவைகள்

Report Print Sujitha Sri in போக்குவரத்து

மட்டக்களப்பு விமான நிலையத்தினை தரமுயர்த்தி அங்கிருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை நடத்த முடியும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவது தொடர்பாக ஆராய்வதற்காக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

யாழ். பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கான அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்து விட்டு மட்டக்களப்பு விமான நிலையத்திற்கும் வருகை தந்தோம்.

ஆகஸ்ட் முதல் வாரம் முதல் இந்தியாவை மையமாக கொண்டு சிவில் விமான சேவையை ஆரம்பிப்பதற்காக பலாலி விமான நிலையத்தினை தரமுயர்த்தவுள்ளோம்.

இதனூடாக இந்தியாவின் மும்பை, ஹைதராபாத், கொச்சின், பெங்களூர் போன்ற இடங்களுக்கு விமான சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோன்று மட்டக்களப்பு விமான நிலையத்தினையும் தரமுயர்த்தி மட்டக்களப்பிலிருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers