வட மாகாணத்திற்கான ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு சாரதிகளினதும், பொதுமக்களினதும் கவனயீனம் தான் முக்கிய காரணம் என போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
யாழ் மாவட்ட எம்.பி.டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட வடக்கு ரயில்பாதை விபத்துக்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களை தடுப்பதற்காக ரயில் கடவைகளில் பொலிஸாரினால் உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு சாரதிகளினதும், பொதுமக்களினதும் கவனயீனமே பிரதான காரணமாகவுள்ளது. ரயில்கள் முன்னர் போல் 30,40, கிலோமீற்றர் வேகத்தில் பயணிப்பதில்லை.
தற்போது 100, 110 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றன. நாம் இது தொடர்பில் அறிவித்தல் பலகைகளை வைத்துள்ளோம். இதனை வாகன சாரதிகளும், பொது மக்களும் கவனத்தில் கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் அமைச்சர் கூறுவதுபோல் பொலிஸார் ரயில்பாதை விபத்துக்களைத்தடுக்கும் பணிகளில் போதிய அக்கறை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ரயில் கடவை காவல் பணிகளுக்கு மிக சொற்ப சம்பளமே வழங்கப்படுவதனால் இப்பணிக்கு வர யாருமே விரும்புவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகையினால் இது தொடர்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கவனம் செலுத்த வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.